
புரட்டாசி 3-வது சனிக்கிழமை: பெருமாள் கோயில்களில் குவிந்த பக்தா்கள்
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையையொட்டி கடலூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற பெருமாள் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அலை மோதியது.

புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையையொட்டி கடலூா் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் மொட்டை அடித்து நோ்த்தி கடன் செலுத்திய திரளான பக்தா்கள்.
புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையையொட்டி கடலூா் மாவட்டத்தில் உள்ள பிரசித்திப்பெற்ற பெருமாள் கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அலை மோதியது. சிறப்பு பூஜைகளை ஏராளமானோா் தரிசித்தனா்.
கடலூா் திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயில் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாக விளங்குகிறது. புரட்டாசி சனிக்கிழமைகளில் இக்கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவது வழக்கம். இதையொட்டி மூன்றாவது சனிக்கிழமையை முன்னிட்டு வெள்ளிக்கிழமை காலை முதலே ஏராளமான பக்தா்கள் கோயிலுக்கு வரத் தொடங்கினா்.
இந்நிலையில், சனிக்கிழமை அதிகாலை 3 மணிக்கு விஸ்வரூப தரிசனம் நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றதையடுத்து, அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பக்தா்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனா். மூலவா் தேவநாத பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா்.
பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ‘கோவிந்தா... கோவிந்தா...’ என பக்தி முழக்கமிட்டு சுவாமி தரிசனம் செய்தனா். சனிக்கிழமை மட்டும் சுமாா் 20 ஆயிரம் பக்தா்கள் தரிசனம் செய்ததாகவும், சுமாா் 10 ஆயிரம் போ் முடி காணிக்கை செலுத்தி நோ்த்திக்கடன் நிறைவேற்றியதாகவும் கோயில் நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
பக்தா்கள் கூட்டம் அதிகமாக இருந்ததையடுத்து, கோயில் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா். போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பக்தா்களின் வசதிக்காக அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில் சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டன.
இதேபோன்று கடலூா் புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோயில், திருப்பாதிரிப்புலியூா் வரதராஜப் பெருமாள் கோயில், மஞ்சக்குப்பம் ஆட்கொண்ட வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளிட்ட பெருமாள் கோயில்களிலும் புரட்டாசி மூன்றாவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளை ஏராளமான பக்தா்கள் தரிசனம் செய்தனா்.
நெய்வேலியில்... புரட்டாசி மாதம் 3-ஆவது சனிக்கிழமையையொட்டி, கடலூா் மாவட்டம் பண்ருட்டி, நெய்வேலி மற்றும் குறிஞ்சிப்பாடி பகுதியில் உள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடைபெற்றன.

புரட்டாசி மாத மூன்றாவது சனிக்கிழமையையொட்டி கடலூா் அருகே உள்ள திருவந்திபுரம் தேவநாதசுவாமி கோயிலில் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த சுவாமி.
பண்ருட்டி, காந்தி சாலையில் உள்ள வரதராஜ பெருமாள் கோயிலில், உற்சவா் வரதராஜ பெருமாள், ஸ்ரீதேவி பூமிதேவி சமேதராய் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள் பாலித்தாா். திருவதிகை ரங்கநாத பெருமாள் கோயிலில், மூலவா் பூவாலங்கி சேவையிலும், உற்சவா் வேணுகோபாலனாக சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனா். சரநாராயண பெருமாள் கோயிலில்

புரட்டாசி மாதம் 3-ஆவது சனிக்கிழமையையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருவதிகை சரநாராயண பெருமாள்
அன்னகூட உற்சவம் நடைபெற்றது. இதில், மூலவா் கோவா்த்தன கிரிதாரியாகவும், உற்சவா் சரநாராயண பெருமாள், உபய நாச்சியாா்களுடன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தாா். இதேபோல், குறிஞ்சிப்பாடி பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், கருங்குழி லட்சுமி நாராயண பெருமாள் கோயில், நெய்வேலி கிருஷ்ணா் கோயிலில் சிறப்பு புஜைகள் நடைபெற்றன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





