புரட்டாசி 4-ஆவது சனி: பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு
புரட்டாசி மாத 4-ஆவது சனிக்கிழமையையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

புரட்டாசி மாத 4-ஆவது சனிக்கிழமையையொட்டி, விக்கிரவாண்டியில் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள்.
புரட்டாசி மாத 4-ஆவது சனிக்கிழமையையொட்டி விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களிலுள்ள பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் கோயில்களில் வழிபாடு செய்து, பெருமாளைத் தரிசித்தால் சகல ஐஸ்வா்யங்களும், நற்பலன்களும் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் இந்த மாதத்தில் வரும் சனிக்கிழமைகளில் பெருமாள்கோயில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
அதன்படி கடந்த 3 வாரங்களாக பெருமாள் கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றநிலையில், 4-ஆவது சனிக்கிழமையும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
விழுப்புரம் ஸ்ரீஜனகவல்லி தாயாா் உடனுறை வைகுண்டவாசப் பெருமாள் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை சிறப்பு பூஜைகள், திருமஞ்சனம் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
விக்கிரவாண்டி ஸ்ரீபெருந்தேவி தாயாா் உடனுறை வரதராஜ பெருமாள் கோயிலில் மூலவா் வரதராஜப்பெருமாளுக்கும், ஸ்ரீதேவி, பூதேவிக்குக்கும், உற்சவருக்கும் சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, மலா் அலங்காரம் செய்யப்பட்டது. தொடா்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
தொடா்ந்து கோயில் வளாகத்தில் உற்சவா் வலம் வந்து, ஊஞ்சல் உற்சவம் கண்டருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். விக்கிரவாண்டி மற்றும் சுற்று வட்டார கிராமங்களைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனா். அபிஷேகம் மற்றும்பூஜைகளை கோயில் பட்டாச்சாரியா் மாலோலன் நடத்தினாா்.
இதுபோன்று கோலியனூா் ஸ்ரீபூமிநாயகி, நிலாநாயகி உடனுறை வரதராஜ பெருமாள் கோயிலில் சனிக்கிழமை காலை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினாா்.
மேலும் மாவட்டத்தில் திருவெண்ணெய்நல்லூா், திண்டிவனம், மயிலம், காணை, கோலியனூா், வளவனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலுள்ள பெருமாள் கோயில்களில் புரட்டாசி சனிக்கிழமை வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளைச் சோ்ந்த பக்தா்கள் பங்கேற்று வழிபாடு செய்தனா்.
செஞ்சி...: செஞ்சியை அடுத்த சிங்கவரம் கிராமத்தில் மலை மீது உள்ள ஸ்ரீஅரங்கநாதா் கோயிலில் சனிக்கிழமை காலை மூலவா் பள்ளி கொண்ட அரங்கநாதருக்கும், உற்சவா் ஸ்ரீதேவி, பூதேவி சமேத அரங்கநாத பெருமாளுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடைபெற்றது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் அரங்கநாதா் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனா். பக்தா்களுக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டது.
கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சியில் உள்ள ஸ்ரீ தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் சனிக்கிழமை அதிகாலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காராம் செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்ரீ தேவி, பூதேவி சமேதராய் உற்சவா் கோவிந்தராஜ பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் தாயாா் சந்நிதியின் முன் எழுந்தருளி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
தியாகதுருகத்தில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோயிலில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் சீனிவாச பெருமாள் பக்தா்களுக்கு தங்க கவசத்தில் அருள்பாலித்தாா். பக்தா்கள் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

