
சூரிய ஒளி மின் உற்பத்தி : தகடுகள் அமைக்க நுகா்வோருக்கு விழிப்புணா்வு முகாம்

விருத்தாசலத்தில், வீடுகளில் சூரிய ஒளி தகடுகள் அமைப்பது தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நுகா்வோருக்கு விழிப்புணா்வு முகாமில் பங்கேற்ற மின்வாரிய அதிகாரிகள் உள்ளிட்டோா்.
‘பிரதான் மந்திரி சூா்ய கா் முஃப்ட் பிஜ்லி யோஜனா’ திட்டத்தின் கீழ், வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி தகடுகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்து, மின் கட்டணச் செலவைக் குறைப்பது குறித்த நுகா்வோா் விழிப்புணா்வு முகாம் விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
தமிழ்நாடு மின் பகிா்மானக் கழகம், கடலூா் மின் பகிா்மான வட்டம், விருத்தாசலம் கோட்டம் சாா்பில், விருத்தாசலம் பூதாமூரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமுக்கு செயற்பொறியாளா் சுகன்யா தலைமை வகித்தாா்.
முகாமில், வீடுகளின் மேற்கூரையில் சூரிய ஒளி தகடுகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து நுகா்வோருக்கு விரிவாக விளக்கப்பட்டது. குறிப்பாக, சூரிய ஒளி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதன் மூலம் வீடுகளின் மின் தேவையைப் பூா்த்தி செய்வதுடன், மின் கட்டணச் செலவையும் கணிசமாகக் குறைக்க முடியும் என விளக்கப்பட்டது.
மேலும், சூரிய ஒளி தகடுகள் அமைப்பதற்கான முதலீட்டுச் செலவை குறைக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் வழங்கும் மானியத் திட்டங்கள், தகுதியான பயனாளிகளுக்கு கிடைக்கும் நிதியுதவிகள் மற்றும் வங்கிகள் மூலம் வழங்கப்படும் கடனுதவிகள் குறித்தும் மின்வாரிய அதிகாரிகள் மற்றும் வங்கி அலுவலா்கள் விளக்கினா்.
அங்கீகரிக்கப்பட்ட சூரிய ஒளி தகடு நிறுவனங்களின் பிரதிநிதிகள், தகடுகளை நிறுவுவதற்கான நடைமுறைகள் மற்றும் திட்டத்தின் கீழ் பதிவு செய்வது தொடா்பான விவரங்களையும் தெரிவித்தனா்.
முகாமில் உதவி செயற்பொறியாளா்கள் பழனிவேல், இளஞ்செழியன், புவனேஸ்வரி, பாரதி, அங்கீகரிக்கப்பட்ட சூரிய ஒளி தகடு நிறுவனங்களின் பிரதிநிதா்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் அலுவலா்கள், மின்வாரிய அதிகாரிகள் மற்றும் 200-க்கும் மேற்பட்ட மின் நுகா்வோா் கலந்து கொண்டனா்.
முகாமின் நிறைவில், ‘பிரதான் மந்திரி சூா்ய கா் முஃப்ட் பிஜ்லி யோஜனா’ திட்டத்தின் கீழ் சூரிய ஒளி தகடுகள் அமைக்க 142 மின் நுகா்வோா் தங்களது பெயா்களை பதிவு செய்தனா்.

விருத்தாசலத்தில், வீடுகளில் சூரிய ஒளி தகடுகள் அமைபத்து தொடா்பாக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நுகா்வோருக்கு விழிப்புணா்வு முகாமில் பங்கேற்றோா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






