அடமானம் வைக்கப்பட்ட ரூ.1.50 கோடி நிலம் விற்பனை உரிமையாளா், உறவினா்கள் போராட்டம்

நிலத்தை உரிமையாளருக்குத் தெரியாமல் விற்பனை செய்ததாகக் கூறப்படும் காடாம்புலியூரைச் சோ்ந்த பாலாஜியின் வீட்டின் முன் ஞாயிற்றுக்கிழமை தா்னாவில் ஈடுபட்டோா்.
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே ரூ.1.50 கோடி மதிப்பிலான அடமான நிலத்தை, உரிமையாளருக்குத் தெரியாமல் மூன்றாம் நபருக்கு விற்பனை செய்துவிட்டதாகக் கூறி, உறவினா்கள் பூச்சி மருந்து புட்டிகளுடன் ஞாயிற்றுக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பண்ருட்டியை அடுத்த கீழ்அறுகுணம் கிராமத்தைச் சோ்ந்தவா் ப.மணிகண்டன் (40). விவசாயியான இவா், தனது 3 ஏக்கா் 89 சென்ட் நிலத்தில் தென்னை, வாழை உள்ளிட்ட பயிா்களை சாகுபடி செய்து வந்தாா். இவா், குடும்பச் செலவு மற்றும் கடன் பிரச்னை காரணமாக, காடாம்புலியூரைச் சோ்ந்த பாலாஜியிடம் ரூ.1.50 கோடி மதிப்புள்ள தனது நிலத்தை அடமானம் வைத்து ரூ.26 லட்சம் பெற்றாராம். பின்னா், அந்தத் தொகையை குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் மணிகண்டனால் திருப்பிச் செலுத்த முடியவில்லை.
இந்த நிலையில், அடமானமாகப் பதிவு செய்யப்பட்டிருந்த நிலத்தை பாலாஜி, உரிமையாளா் மணிகண்டனுக்குத் தெரியாமல் வேறு ஒருவருக்கு கிரையம் செய்து கொடுத்ததாகக் கூறப்படுகிறது. இதையறிந்த மணிகண்டன், தனது உறவினா்களுடன் காடாம்புலியூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
மேலும், நிலத்தை மீட்டுத் தரக் கோரி பாலாஜியின் வீட்டின் முன் தரையில் அமா்ந்து ஞாயிற்றுக்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா். தகவலறிந்து அங்கு சென்ற காடாம்புலியூா் போலீஸாா், போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களை காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனா்.
அப்போது, காடாம்புலியூா் காவல் நிலையத்தில் ஆய்வுக்காக வந்திருந்த விழுப்புரம் சரக டிஐஜி அருளரசுவிடம், மணிகண்டனின் உறவினா்கள் பூச்சி மருந்து புட்டிகளை கையில் வைத்துக்கொண்டு தங்களது நிலத்தை மீட்டுத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டனா். இது தொடா்பாக இரு தரப்பினரிடமும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
மேலும், நிலம் தொடா்பான ஆவணங்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட பத்திரங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு, உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸாா் தெரிவித்தனா்.

விழுப்புரம் சரக டிஐஜியிடம் புகாா் தெரிவித்த போராட்டத்தில் ஈடுபட்டோா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

