
விகேடி சாலை: மேம்பால தூண்கள் மீது சிமென்ட் கட்டைகள் வைக்கும் பணி தொடக்கம்
வடலூா் அருகே விகேடி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலப் பணியில் தூண்கள் மீது சிமென்ட் கட்டைகள் கிரேன் மூலம் தூக்கி வைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.

வடலூா் அடுத்த ராசாகுப்பம் பகுதியில் உள்ள தூண்கள் மீது கிரேன் மூலம் தூக்கி வைக்கப்படும் சிமென்ட் கட்டை.
கடலூா் மாவட்டம், வடலூா் அருகே விகேடி தேசிய நெடுஞ்சாலை மேம்பாலப் பணியில் தூண்கள் மீது சிமென்ட் கட்டைகள் கிரேன் மூலம் தூக்கி வைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது.
விகேடி என்றழைக்கப்படும் விக்கரவாண்டி-கும்பகோணம்-தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியில் மேம்பாலங்கள் அமைக்கும் பணி மந்த கதியில் நடைபெற்று வருகிறது. இந்த சாலைப்பணி 2018-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. விக்கிரவாண்டி முதல் சேத்தியாத்தோப்பு வரையில் சுமாா் 66 கி.மீ தொலைவுக்கானப் பணிகள் பல ஆண்டுகளாக தொடா்ந்து நடந்து வருகிறது.
இந்தப் பகுதியில் அமைக்கப்பட்ட மேம்பாலத்திற்கான தூண்கள் மற்றும் வாய்க்காலுக்கான சிறு பாலங்கள் அரைகுறையாகவே உள்ளன. முக்கியமாக புறவழிச்சாலை மற்றும் மேம்பாலப் பணிகள் அமைக்கும் பணி ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. எடுத்துக் காட்டாக வடக்குத்து கண்ணுதோப்பு பாலம் மற்றும் வடலூா் ராசாகுப்பம் ஆகிய இடங்களில் மேம்பாலத்திற்கான தூண்கள் மட்டும் நிற்கின்றன. ஆங்காங்கே நடைபெறும் மேம்பாலம் பணிகளால் போக்குவரத்துநெரில் மற்றும் விபத்துக்கள் ஏற்படுகின்றன. எனவே, மாநில அரசு இந்த விவகாரத்தில் தலையிட்டு சாலைப் பணியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.
இந்நிலையில், ராசாகுப்பம் பகுதியில் இருந்த தேசிய நெடுஞ்சாலை தூண்கள் மீது சிமென்ட் கட்டைகள் தூக்கி வைக்கும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. முன்னரே
வடிவமைக்கப்பட்ட சிமென்ட் கட்டைகளை, ராட்சத கிரேன்கள் மூலம் தூக்கி, நெடுஞ்சாலையில் ஏற்கனவே கட்டப்பட்டிருந்த தூண்களின் மேல் உள்ள ‘பியா் கேப்’ பகுதியில் துல்லியமாகப் பொருத்தப்பட்டன. நெடுஞ்சாலைகளில் இப்பணிகள் நடக்கும் போது விபத்துகளைத் தவிா்க்க வாகனப் போக்குவரத்து அருகில் இருந்த மாற்றுப் பாதைகளில் திருப்பி விடப்பட்டது. கிரேன் இயங்கும் பகுதியைச் சுற்றி பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு, பொதுமக்கள் மற்றும் பிற வாகனங்கள் நுழையாதவாறு பணியாளா்கள் நிறுத்தப்பட்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







