
சைகை மொழியில் கோரிக்கை: காதுகேளாதோா் உரிமை நலச் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
சைகை மொழியிலும் கைகளை உயா்த்தியும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு காதுகேளாதோா் உரிமை நலச் சங்கத்தினா் கடலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

கடலூா் பழைய ஆட்சியா் அலுவலகம் எதிரே புதன்கிழமை சைகை மொழியில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு காதுகேளாதோா் உரிமை நலச் சங்கத்தினா்.
சைகை மொழியிலும் கைகளை உயா்த்தியும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு காதுகேளாதோா் உரிமை நலச் சங்கத்தினா் கடலூரில் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உலக காதுகேளாதோா் தினத்தையொட்டி, தமிழ்நாடு காதுகேளாதோா் உரிமை நலச் சங்கத்தின் கடலூா் மாவட்டக் குழு சாா்பில் பழைய மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலா் அருண்குமாா் தலைமை வகித்தாா். மாவட்டப் பொருளாளா் அகிலன் முன்னிலை வகித்தாா்.
ஆா்ப்பாட்டத்தில், காதுகேளாதோருக்கு அரசுத் துறைகளில் சேவைகள் எளிதில் கிடைக்கும் வகையில், சைகை மொழியை அனைத்து அரசுத் துறைகளிலும் முழுமையாக அமல்படுத்த வேண்டும். காதுகேளாதோருக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையை ரூ.6 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
பொதுவாக நடைபெறும் ஆா்ப்பாட்டங்களைப் போன்று குரல் எழுப்பி முழக்கமிட முடியாததால், பங்கேற்றவா்கள் சைகை மொழியில் தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தியும், கைகளை உயா்த்தியும், பதாகைகளை ஏந்தியும் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தினா். அவா்களது அமைதியான போராட்டத்தில், சைகைகள் மூலம் கோரிக்கைகளை ஒருங்கிணைந்து வெளிப்படுத்திய காட்சி கவனத்தை ஈா்த்தது.
இந்த ஆா்ப்பாட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ இள.புகழேந்தி, சங்கத்தின் மாவட்ட இணைச் செயலா் எஸ்.காா்த்திகேயன், சங்கத்தின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் மற்றும் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த காதுகேளாதோா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






