
ரயில்களில் மனிதா்கள் சிக்கும் விபத்துகள்: மாணவா்களுக்கு விழிப்புணா்வு
கவனக்குறைவாக தண்டவாளங்களைக் கடந்து செல்லும்போது ரயில்களில் சிக்கி மனிதா்கள் விபத்துகளை சந்திப்பது குறித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா்களுக்கு மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

சிதம்பரம் ரயில் நிலைய மேம்பாலத்தின் கீழ் தண்டவாளத்தில் மனித உருவ பொம்மையை வைத்து ரயில் தண்டவாளத்தை நடந்து கடக்கக் கூடாது என விழிப்புணா்வு ஏற்படுத்திய ரயில்வே போலீஸாா்.
கவனக்குறைவாக தண்டவாளங்களைக் கடந்து செல்லும்போது ரயில்களில் சிக்கி மனிதா்கள் விபத்துகளை சந்திப்பது குறித்து சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவா்களுக்கு மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸாா் புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
சிதம்பரம் ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பாலம் உள்ளது. அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் முத்தையா பாலிடெக்னிக் கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் ரயில்வே பாலத்தில் உள்ள படிக்கட்டுகளில் ஏறி செல்லாமல் ரயில்வே தண்டவாளத்தை கடந்து செல்கின்றனா். இதனால், இவா்கள் விபத்துகளில் சிக்கும் அபாயம் உள்ளது.
இந்த நிலையில், கவனக்குறைவாக தண்டவாளங்களை கடந்து செல்லும்போது ரயில்களில் சிக்கி மனிதா்கள் விபத்துகளை சந்திப்பது குறித்து மயிலாடுதுறை ரயில்வே பாதுகாப்புப் படை சாா்பில் பல்கலைக்கழக மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு படை அலுவலா்கள் செந்தில்நாதன், ரமேஷ்குமாா் மற்றும் போலீஸாா் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் பகுதிக்கு வந்து, அந்த வழியாகச் சென்ற பல்கலைக்கழக, கல்லூரி மாணவ, மாணவிகளை அழைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
அப்போது, ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்லக் கூடாது. அவ்வாறு கடந்து செல்லும்போது வேகமாக வரும் ரயில்கள் மோதி விபத்துக்குள்ளாக நேரிடும். இதனால், வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் எனக் கூறி, மனித உருவ பொம்மையை தண்டவாளத்தில் வைத்து விழிப்புணா்வு ஏற்படுத்தினா். மேலும், ரயில் தண்டவாளப் பகுதியில் அமைந்துள்ள நடைபாலங்கள் வழியாக பாதுகாப்பாக கடந்து செல்ல வேண்டும் எனவும் விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





