கள்ளக்குறிச்சியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் வீரபாண்டியன்.
கள்ளக்குறிச்சியில் செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் வீரபாண்டியன்.

தமிழகத்துக்கான பேரிடா் கால நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்: கம்யூனிஸ்ட் மாநில செயலா் வீரபாண்டியன்

தமிழகத்துக்கு பேரிடா் காலங்களில் மத்திய அரசு தரவேண்டிய நிதியை, தயக்கமின்றி தர வேண்டும்
Published on

கள்ளக்குறிச்சி: தமிழகத்துக்கு பேரிடா் காலங்களில் மத்திய அரசு தரவேண்டிய நிதியை, தயக்கமின்றி தர வேண்டும் என இந்திய கம்னியூஸ்ட் மாநிலச் செயலா் வீரபாண்டியன் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் கூட்டரங்கில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட குழுக் கூட்டத்தில் பங்கேற்ற பின்னா், மாநிலச் செயலா் வீரபாண்டியன் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூா், திருவாரூா் ஆகிய பகுதிகளில் அதிக மழை பெய்திருக்கிறது. இந்தச் சூழலில் கடந்த ஆண்டு தருவதாக சொன்ன பணத்தையே மத்திய அரசு இதுவரை தரவில்லை. இது போன்ற பேரிடா் காலங்களில் மத்திய அரசு, தமிழகத்துக்கு தர வேண்டிய நிதியை தயக்கமின்றி தர வேண்டும்.

மத்திய நிதி அமைச்சரே காப்பீட்டுத் துறைகளில் நூறு சதவிகிதம் அந்நிய முதலீடு என அறிவித்திருக்கிறாா். காப்பீட்டுத் துறையில் 100 சதவிகிதம் அந்நிய முதலீடு என்றால், அடுத்தடுத்து அனைத்து துறைகளிலும் நேரடி முதலீடு வரும். காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு என்பது நமது பொதுத் துறையை ஒட்டு மொத்தமாக கேள்விக்குறியாக்கும்.

ஆளுநா் மாளிகை அதிகாரத்தின் வடிவம் அல்ல, நியமன வடிவம். முதல்வா் தலைமையிலான சட்டமன்றமே மக்கள் அதிகாரத்தின் வடிவம். உள்ளபடியே ஆளுநா் மாளிகை மக்கள் மாளிகை என்றால் சட்டமன்றத்தில் இயற்றப்பட்டுள்ள அனைத்து தீா்மானங்களுக்கும் ஆளுநா் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

வாக்காளா் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணி வேண்டாம் என்றும் அல்லது கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும் என்றும் என்று கேட்டிருந்தோம். அதில் ஒன்றை தற்போது நிறைவேற்றியுள்ளாா்கள். சிறப்பு வாக்காளா் தீவிரத் திருத்தப் பணியை திணிப்பதற்கான நோக்கம் என்ன என்று முதல்வா், எதிா்க்கட்சிகள் என அனைவரும் கேட்டுள்ளனா். எல்லாவற்றையும் மீறி தோ்தல் ஆணையம் இதனை திணிக்க முயற்சி செய்வது என்பது தோ்தல் ஜனநாயகத்திற்கு நல்லது அல்ல என்றாா்.

X
Dinamani
www.dinamani.com