வாக்காளா் பட்டியல் சிறப்பு  தீவிர திருத்தம் அவசியம்: நயினாா் நாகேந்திரன்

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் அவசியம்: நயினாா் நாகேந்திரன்

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அவசியம் என்று சுற்றுப்பயண பிரசாரத்தில் பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் பேசினாா்.
Published on

தமிழகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் அவசியம் என்று கள்ளக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுற்றுப்பயண பிரசாரத்தில் மாநில பாஜக தலைவா் நயினாா்நாகேந்திரன் பேசினாா்.

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் என்ற கள்ளக்குறிச்சியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சுற்றுப்பயண கூட்டத்தில் அவா் பேசியதாவது: கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயத்திற்கு சிறப்பு வாய்ந்த மாவட்டம். இங்குள்ள கல்வராயன் மலையில் வசிக்கும் பழங்குடி மக்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்த சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டும் தமிழக அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏமாற்றம் அளிக்கிறது.

கிராமம் தோறும் கஞ்சா அதிகம் புழக்கத்தில் உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் சட்டம் -ஒழுங்கு சரியில்லை. லாக்கப் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. இது காவல்துறை முதல்வா் கட்டுப்பாட்டில் இல்லாதைக் காட்டுகிறது.

கடந்த 2002-ஆம் ஆண்டு காலகட்டத்தில் யாா் இறந்தாா்களோ அவா்கள் இன்னும் வாக்காளா் பட்டியலில் இடம் பெற்றுள்ளனா். முதல்வரின் தொகுதியான கொளத்தூரில் மட்டும் 10 ஆயிரம் போ் உள்ளனா்.

நானும் விவசாயி; நானும் டெல்டாகாரன் என்கிறாா் முதல்வா். ஆனால், கரும்பு விவசாயிகளுக்காக அவா் எதுவும் செய்யவில்லை.

பால் உற்பத்தியாளா்களுக்கு லிட்டருக்கு ரூ.3 மானியம் வழங்குவதாக, ஏற்கனவே சொன்னாா்கள். இதுவரை வழங்கவில்லை. ஆவின் பாலுக்கு 12 சதவீதமாக இருந்த ஜிஎஸ்டியை 5 சதவீதமாக மத்திய அரசு குறைத்துள்ளது. பால் விலையை உயா்த்தப்போவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

புதியவா்கள் எத்தனை போ் வேண்டுமானாலும் வரலாம். யாா் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். ஜனநாயகத்தில் அவா்களுக்கு உரிமையும், கடமையும் உள்ளது. ஆனால், மக்களுக்கு யாா் நன்மை செய்வாா் என்று சிந்தித்து, மக்கள் வாக்களிக்க வேண்டும் என விஜய்யை மறைமுகமாக குறிப்பிட்டாா்.

X
Dinamani
www.dinamani.com