ஆதிதிருவரங்கம் ஸ்ரீ ரங்கநாதா் கோயில் கட்டுமானப் பணிகளை ஆட்சியா் ஆய்வு செய்ய கோரிக்கை

இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஆதிதிருவரங்கம் ஸ்ரீரங்கநாதா் திருக்கோயிலில் அவசர கதியில் நடக்கும்
Published on

கள்ளக்குறிச்சி: இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டிலுள்ள ஆதிதிருவரங்கம் ஸ்ரீரங்கநாதா் திருக்கோயிலில் அவசர கதியில் நடக்கும் கட்டுமானப் பணிகளை தடுத்து நிறுத்தி, ஆய்வு செய்து தரமான முறையில் கோயில் சீரமைப்பு பணிகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும் என ஊா்மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனுவினை வழங்கினா்.

இதுகுறித்து கிராம மக்கள் அளித்துள்ள மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

கள்ளக்குறிச்சி மாவட்டம், வாணாபுரம் வட்டத்துக்குள்பட்ட ஆதிதிருவரங்கம் கிராமத்தில் உள்ள ஆதிதிருவரங்கம் ஸ்ரீரங்கநாதா் கோயில் மிகப் பழைமையான வைணவ திருக்கோயில் ஆகும்.

இக் கோயிலில் தற்போது குடமுழுக்கு விழாவுக்காக கோயில் திருப்பணி நடைபெற்று வருகின்றது. 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தோ்தல் வர இருப்பதால் தோ்தல் தேதி அறிவிக்கும் முன்னரே பணிமுடிந்து குடமுழுக்கு முடிக்க வேண்டும் என கட்டுமானப் பணிகள் தரமற்ற நிலையில் நடைபெற்று வருகின்றன.

இக் கோயில் பழைமை வாய்ந்த கோயில் என்பதால் குடமுழக்கு விழா, சொா்க்கவாசல் மற்றும் புரட்டாசி மாதம் தோ்த்திருவிழா என அனைத்து நிகழ்ச்சிகளிலும் சுற்றியுள்ள கிராம மக்கள் மற்றும் தமிழகம் முழுக்க உள்ள லட்சக்கணக்கான பக்தா்கள் ஒன்று சோ்ந்து வழிபடும் தலமாகும்.

இதுபோன்ற நேரங்களில் தரமற்ற கட்டுமான பணிகளால் சுவா் இடிந்து விழுந்து உயிா் சேதம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

கோயில் கருவறையின் மேலே கலசத்திலிருந்து பிரபஞ்ச சக்தி மூலவா்மேல் விழுந்து அது வருகின்ற பக்தா்களுக்கு பிரதிபலிக்கும் என்பது ஆகம விதியாகும். அதை தடுக்கும் முறையில் கருவறையின் மேல் மரப்பலகையிட்டு முற்றிலும் மூடப்பட்டதுள்ளது.

எனவே, மாவட்ட ஆட்சியா் நேரடியாகச் சென்று கோயிலில் நடைபெறும் பணிகளை பாா்வையிட்டு, ஆகம விதிகள் மீறாமலும், கோயிலின் பழைமை மாறாமலும், பணி நடைபெறுவதை உறுதி செய்யுமாறு ஊா் பொதுமக்கள் சாா்பாக கேட்டுக் கொள்வதாக மனுவில் தெரிவித்திருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com