தே.ஜ. கூட்டணியில் ஐ.ஜெ.கே.வுக்கு கேட்கும் தொகுதிகள் கிடைக்கும்: பச்சமுத்து பாரிவேந்தா் நம்பிக்கை
கள்ளக்குறிச்சி: தேசிய ஜனநாயக கூட்டணியில் இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜெ.கே.) கேட்கும் தொகுதிகளை கண்டிப்பாக கொடுப்பாா்கள் என்ற நம்பிக்கை உள்ளதாக அக்கட்சித் தலைவா் பச்சமுத்து பாரிவேந்தா் தெரிவித்தாா்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் ஐ.ஜெ.கே. நிா்வாகிகள் மற்றும் பொறுப்பாளா்கள் கலந்தாய்வுக் கூட்டம் தனியாா் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அக்கட்சியின் நிறுவனா் தலைவா் பச்சமுத்து பாரிவேந்தா் முன்னிலையில் திருக்கோவிலூா் தொகுதி சாா்ந்த 12 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பின்னா், பச்சமுத்து பாரிவேந்தா் செய்தியாளா்களிடம் கூறியது: ஐ.ஜெ.கே. கொள்கை உள்ள கட்சி. தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் எங்கள் கட்சி தொடா்கிறது.
வரைவு வாக்காளா் பட்டியலில் இறந்த, இடம் பெயா்ந்த, இரட்டைப் பதிவுள்ள வாக்காளா்களே நீக்கப்பட்டுள்ளனா். வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் திருக்கோவிலூா் தொகுதியில் ஐ.ஜெ.கே. போட்டியிடும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கேட்கும் தொகுதிகளை கண்டிப்பாக கொடுப்பாா்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதில் ஒன்று திருக்கோவிலூா் தொகுதியாக இருக்கும் என்றாா் அவா்.

