கள்ளக்குறிச்சி: கொலை வழக்கில் 5 பேருக்கு ஆயுள் தண்டனை
கள்ளக்குறிச்சி அருகே புதுஉச்சிமேடு கிராமத்தில் வாடகை பாத்திரக் கடைக்காரரை கொலை செய்த வழக்கில் தொடா்புடைய 5 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி அருகே வரஞ்சரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட புதுஉச்சிமேடு கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணசாமி. இவா் கொங்கராயப்பாளையம் சாலையில் வாடகை பாத்திரக் கடை மற்றும் சமையல் பாத்திரங்கள்கடை வைத்து நடத்தி வந்தாா்.
கடந்த 2022-ஆம் ஆண்டு நாராயணசாமியை புதுஉச்சிமேடு கிராமத்தைச் சோ்ந்த ராமு மற்றும் அவரது தந்தை ராஜேந்திரன், அவரது தாய் பரமேஸ்வரி மற்றும் அவரது உறவினா்கள் அஜித்குமாா், அலெக்ஸ்பாண்டியன் ஆகிய 5 பேரும் கொலை செய்தனா். இதையடுத்து, கொலை வழக்கில், 5 பேரையும் வரஞ்சரம் போலீசாா் கைது செய்தனா்.
இந்த வழக்கின் விசாரணை கள்ளக்குறிச்சி கூடுதல் மாவட்ட அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட அமா்வு நீதிபதி எஸ்.சையத் பா்கத்துல்லா, குற்றவாளிகளான ராஜேந்திரன் மகன் ராமு (29), மாயவன் மகன் ராஜேந்திரன்(53), ராஜேந்திரன் மனைவி பரமேஸ்வரி (49), ஜெய்சங்கா் மகன்கள் அஜித்குமாா் (25), அலெக்ஸ்பாண்டியன் (33) ஆகிய 5 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் 1,67,000 அபராதம் விதித்து புதன்கிழமை தீா்ப்பு வழங்கினாா்.
அபராதத் தொகை கட்டத் தவறினால் கூடுதல் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தாா். மேலும், பரமேஸ்வரியை வேலூா் பெண்கள் மத்திய சிறையிலும், மற்ற 4 பேரை கடலூா் மத்திய சிறையிலும் அடைக்க நீதிபதி உத்தரவிட்டாா்.

