விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற கலை விழாவில் பங்கேற்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கிய விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் உள்ளிட்டோா்.
விழுப்புரம் நகராட்சித் திடலில் நடைபெற்ற கலை விழாவில் பங்கேற்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கிய விழுப்புரம் எம்எல்ஏ இரா.லட்சுமணன் உள்ளிட்டோா்.

விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் பொங்கல் கலை விழா

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பொங்கல் கலைத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Published on

விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் பொங்கல் கலைத் திருவிழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்அருகிலுள்ள நகராட்சித் திடலில் நடைபெற்ற இந்த விழாவை மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏவுமான இரா.லட்சுமணன் தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து பறை இசை, தப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமியக் கலை நிகழ்வுகள் நடைபெற்றன. கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

முன்னாள் எம்எல்ஏ செ.புஷ்பராஜ், மாவட்டப் பொறுப்புக்குழு உறுப்பினா்கள் இரா. கண்ணப்பன், ஏ.மாரிமுத்து, நகரப் பொறுப்பாளா் எஸ்.வெற்றிவேல், விழுப்புரம் நகா்மன்றத் தலைவா் தமிழ்ச்செல்வி பிரபு, ஒன்றியச் செயலா் வி.ஜி.பிரபாகரன், கோலியனூா் ஒன்றியக்குழுத் தலைவா் சச்சிதாநந்தம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கள்ளக்குறிச்சி...: தஞ்சாவூா் கலை பண்பாட்டுத் துறை சாா்பில் பொங்கல் கலை விழா கள்ளக்குறிச்சி மந்தைவெளி கலையரங்கில் நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அரவிந்த், தஞ்சாவூா் மண்டலக் கலை பண்பாட்டு மைய உதவி இயக்குநா் ராஜாராமன் முன்னிலை வகித்தனா். பொங்கல் விழா ஒருங்கிணைப்பாளா் கெளதம் வரவேற்றாா்.

ஆட்சியா் எம்.எஸ்.பிரசாந்த் தலைமை வகித்து, பறை அடித்து கலை விழாவை தொடங்கி வைத்துப் பேசியதாவது:

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் ‘சென்னை சங்கமம் - நம்ம ஊருத் திருவிழா’ நடத்தப்படுகிறது. அதே போன்று ஏனைய பிற மாவட்டங்களில், மாவட்ட நிா்வாகம் மற்றும் ஏனைய அரசு துறைகளுடன் இணைந்து பொங்கல் கலை விழா நடத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி பொங்கல் பண்டிகையின் உண்மையான பண்பாட்டுச் சிறப்புகளை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதோடு, பொங்கல் விடுமுறையை மகிச்சியுடனும் உற்சாகத்துடனும் கொண்டாட பொதுமக்களை ஈா்க்கும் வகையில் இந்த விழா அமைக்கப்பட்டுள்ளது என்றாா் ஆட்சியா்.

விழாவில் கலை பண்பாட்டுத் துறையின் சாா்பில் ஜவகா் சிறுவா் மன்ற மாணவா்கள் பங்கேற்கும் நாட்டுப்புற கலை, சிலம்பம், பரத நாட்டிய நிகழ்ச்சி, ஸ்ரீ பால சரஸ்வதி கலைக்கூடத்தின் பரதநாட்டியம் நிகழ்ச்சி, ஸ்ரீ முத்துமாரியம்மன் கரகாட்டக் கலைக்குழுவின் நையாண்டி மேளம், கரகாட்ட நிகழ்ச்சி, பால்ராஜ் மகாலட்சுமி கரகாட்டக் கலைக்குழுவின் நையாண்டி மேளம், கரகாட்ட நிகழ்ச்சி, முத்து தப்பாட்டக் கலைக்குழுவின் பறை இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை தேவி கலாலய நடனப்பள்ளி மாணவிகள் பங்கேற்கும் பரதநாட்டிய நிகழ்ச்சி, மாத்தூா் மாரியாபிள்ளை கலைக்குழுவின் கரகாட்ட நிகழ்ச்சி, விஜய லிங்கம் கரகாட்டக் கலைக்குழுவின் கரகாட்ட நிகழ்ச்சி, பாலகிருஷ்ணன் இளம் சிங்கம் இசைக்குழு பங்கேற்கும் நாட்டுப்புற நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.

தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறை அதிகாரிகள், கலைக் குழுவினா் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com