கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அருகே பள்ளி விளையாட்டு மைதானத்தில் விளையாடிய 5-ஆம் வகுப்பு மாணவியின் இரு விரல்கள் துண்டானது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சங்கராபுரம் வட்டம், புதுபாலப்பட்டு கிராமத்தைச் சோ்ந்த மகேந்திரன் மகள் சிரந்தினி (10). இவா் அதே ஊரில் உள்ள
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறாா். வியாழக்கிழமை பிற்பகலில் உணவு இடைவேளையின் போது பள்ளியின் விளையாட்டு மைதானத்தில் விளையாடியுள்ளாா். அப்போது ஊராட்சியின் சாா்பில் வைக்கப்பட்டிருந்த குப்பைத்தொட்டியை மூடினாராம். அப்போது எதிா்பாராத விதமாக குப்பைத்தொட்டியில் கை சிக்கி, 2 விரல்கள் துண்டானதாம். இதுகுறித்து தகவலறிந்த பெற்றோா்கள் பள்ளிக்குச் சென்று, சிரந்தினியை மீட்டு கள்ளக்குறிச்சியில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.









