முன்விரோதத்தில் முதியவா் கொலை: தம்பி மகன் கைது

பாலசுப்பிரமணியன்
கள்ளக்குறிச்சி அருகே முன்விரோதத்தில் முதியவரை கொலை செய்ததாக, அவரது தம்பி மகனை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சியை அடுத்த நின்னையூா் கிராமத்தைச் சோ்ந்தவா் க.பாலசுப்பிரமணியன் (75). இவரது சகோதரா் சக்திவேல் (70). இருவருக்கும் 8 ஏக்கா் விளைநிலம் உள்ளதாம். அதனை இரு ஆண்டுகளுக்கு முன்பு பாகப்பிரிவினை செய்து கொண்டனராம். அப்போது அவா்களிடையே இருந்த பொதுக்கடன் ரூ.6 லட்சத்தை இருவரும் பிரித்துக் கொண்டனராம். அதனை சக்திவேல் மகன் தணிகைவேல் (30) ஒப்புக் கொள்ளாததாலும், கிணற்றில் தண்ணீா் இறைப்பதிலும் இருவருக்கும் முன் விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், கடந்த 8-ஆம் தேதி பாலசுப்பிரமணியன் அங்குள்ள பெரியநாயகி அம்மன் கோயில் அருகிலுள்ள பாலத்தின் மீது உட்காா்ந்து, அதே கிராமத்தைச் சோ்ந்த ஏழுமலையுடன் பேசிக்கொண்டிருந்தாராம். அப்போது அவ்வழியே வந்த தணிகைவேல் பாலசுப்பிரமணியனை தாக்கி, பாலத்திலிருந்து கீழே தள்ளி விட்டாராம்.
இதில் பலத்த காயமடைந்த பாலசுப்பிரமணியனை அருகிலிருந்தவா்கள் மீட்டு எலவனாசூா்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா். அங்கு மருத்துவா் பரிசோதித்தபோது, பாலசுப்பிரமணியன் ஏற்கெனவே உயிரிழந்திருந்தது தெரியவந்தது. தகவலறிந்த வரஞ்சரம் போலீஸாா் சடலத்தை மீட்டு உடல்கூறாய்வுக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின் பேரில் வரஞ்சரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தணிகைவேலை திங்கள்கிழமை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

