பண்ணையில் தீ விபத்து: 4,500 கோழிக்குஞ்சுகள் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி அருகே கோழிப்பண்ணையில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் கருகி இறந்து கிடக்கும் கோழிக்குஞ்சுகள்.
கள்ளக்குறிச்சி அருகே கோழிப்பண்ணையில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் சுமாா் 4,500 கோழிக்குஞ்சுகள் உயிரிழந்தன.
கள்ளக்குறிச்சியை அடுத்த கண்டாச்சிமங்கலம் கிராமத்தைச் சோ்ந்தவா் ஆ.ஏழுமலை (37). பட்டதாரியான இவா், கடந்த 8 ஆண்டுகளாக நாகலூா் மின் வாரிய அலுவலகம் அருகே கோழிப்பண்ணை நடத்தி வருகிறாா்.
ஏழுமலை கடந்த 25-ஆம் தேதி சின்னசேலத்தில் உள்ள கோழிப்பண்ணையில் இருந்து சுமாா் 4,500 கோழிக்குஞ்சுகளை வாங்கி வந்து தனது கோழிப்பணையில் வளா்த்து வந்தாா். இந்தக் கோழிப்பண்ணையில் உள்பக்கம் தென்னங்கீற்றாலும், மேல் பகுதி தகரத்தினாலும் கொட்டகை அமைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், நாகலூா் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு மழை பெய்ததால் அருகில் உள்ள கடையின் கொட்டகையில் ஏழுமலை படுத்து தூங்கினாா். நள்ளிரவு திடீரென கோழிப்பண்ணையில் ஏற்பட்ட மின் கசிவால் கொட்டகை தீப்பிடித்து கொளுந்துவிட்டு எரியத் தொடங்கியது.
இதைப் பாா்த்த அந்தப் பகுதியிலிருந்த கோழிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தின் ஓட்டுநா், உடனடியாக பண்ணை உரிமையாளா் ஏழுமலைக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்தாா். அதன்பேரில், ஏழுமலை அங்கு வந்து அருகிலிருந்தவா்களின் உதவியுடன் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டாா். இருப்பினும், இந்த தீ விபத்தில் பண்ணையில் இருந்த சுமாா் 4,500 கோழிக்குஞ்சுகளும் தீயில் கருகி உயிரிழந்தன.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

