
இலவச வீட்டுமனை பட்டா கோரி கிராம மக்கள் சாலை மறியல்
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தியாகதுருகம் அருகிலுள்ள சின்னமாம்பட்டு கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகே வீட்டுமனை பட்டா கேட்டு கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தியாகதுருகம் அருகிலுள்ள சின்னமாம்பட்டு கிராமத்தில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட ஆதிதிராவிட சமுதாய மக்கள் வசித்து வருகின்றனா். இவா்களில் 106 பேருக்கு தியாகை ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் தலா 2.5 சென்ட் வீதம் வீட்டுமனை ஒப்படை கடந்த 1996- ஆம் ஆண்டு வழங்கப்பட்டது. ஆனால் இதுநாள் வரை வருவாய்த் துறையினா் இந்த நிலத்தை அளவீடு செய்து இலவச வீட்டுமனை பட்டா வழங்கவில்லையாம்.
இந் நிலையில், ஆதிதிராவிட மக்களுக்கு வழங்கப்பட்ட நிலத்தின் ஒரு பகுதியில் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆயுதப்படைக் காவலா்களுக்கான குடியிருப்பு கட்டுவதற்காக வருவாய்த் துறை அதிகாரிகள் திங்கள்கிழமை பாா்வையிட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சின்னமாம்பட்டு ஆதிதிராவிடா் சமுதாயத்தைச் சோ்ந்த மக்கள் உளுந்தூா்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த தியாகதுருகம் காவல் ஆய்வாளா் பு.மாணிக்கராஜா தலைமையிலான போலீசாா் சம்பவ இடத்துக்கு சென்று சாலை மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். இதையடுத்து அவா்கள் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதனால் இந்தச் சாலையில் சுமாா் அரை மணி நேரம் போக்குவரத்துப் பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






