கார்னிவல் விழா நடத்த மார்க்சிஸ்ட் எதிர்ப்பு
காரைக்கால், ஜன. 8: திருமலைராஜனாறு பாலம் பழுதாகி காரைக்கால் வணிகர்களுக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு மக்களும் மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் கார்னிவல் விழா நிகழ்த்த வேண்டியதன் அவசியம் என்ன


காரைக்கால், ஜன. 8: திருமலைராஜனாறு பாலம் பழுதாகி காரைக்கால் வணிகர்களுக்கும், அரசுக்கும் வருவாய் இழப்பு ஏற்பட்டு மக்களும் மன உளைச்சலுக்கு உள்ளான நிலையில் கார்னிவல் விழா நிகழ்த்த வேண்டியதன் அவசியம் என்ன என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
புதுவை அரசின் சுற்றுலாத் துறை சார்பில் காரைக்காலில் கார்னிவல் விழா வரும் 15 முதல் 4 நாள் நடத்த திட்டமிட்டு ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.
இதை கண்டிக்கும் வகையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் காரைக்கால் வட்டச் செயலர் அ.வின்சென்ட் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது:
கடந்த 2004-05ஆம் ஆண்டு புதுவை அரசின் சுற்றுலாத் துறையும், நகை வியாபாரிகளும் இணைந்து நடத்திய தங்கத் திருவிழாவில் பல முறைகேடு நடந்ததாக நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், எதிர்காலத்தில் இதுபோன்ற விழா நடத்தக்கூடாதென நீதிமன்றம் தடை ஆணை பிறப்பித்தது. தற்போது மீண்டும் சுற்றுலாத் துறை சார்பில் காரைக்காலில் வணிகத்தை பெருக்கும் நோக்கில் கார்னிவல் நடத்த முடிவு செய்யப்பட்டு ஏற்பாடுகள் நடக்கிறது.
இதற்காக அரசு ரூ.30 லட்சம் ஒதுக்கியுள்ளதாக தகவல் தெரிவிக்கிறது. காரைக்காலில் பெருநகரங்களை இணைக்கும் வகையில் உள்ள திருமலைராஜனாறு பாலம் பழுதாகி போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் காரைக்காலில் உள்ள வியாபாரிகளுக்கு வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள், முதியோர் என எல்லா நிலையில் இருப்போரும் போக்குவரத்து பாதிப்பால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
இந்த சூழலில் திரைப்பட குழுவினர் உள்ளிட்டோர் அழைத்து வந்து கார்னிவல் நடத்த வேண்டுமா என மார்க்சிஸ்ட் கேள்வி எழுப்புகிறது. இதற்காக செலவிடும் தொகை பாலம் பழுதானதை சீரமைக்க ஒதுக்குவதோடு, கூடுதலாக தரைப்பாலம் அமைத்து போக்குவரத்தை சீர்செய்ய பயன்படுத்தலாம்.
இல்லையெனில் காரைக்காலில் நிதியின்மையால் பல்வேறு கட்டுமானங்கள், வளர்ச்சி திட்டங்கள் கிடப்பில் போடப்பட்டுள்ளதை சீர்செய்யலாம். ஆனால் புதுவை அரசோ, மத்திய அரசு தரும் நிதியை வீணாக செலவிடுவதிலும், இல்லையெனில் எந்த பயன்பாட்டுக்கும் செலவிடாமல் நிதியை திருப்பி அனுப்புவதில் கவனம் செலுத்துகிறது. புதுவை அரசின் இச்செயலை மார்க்சிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. கார்னிவல் விழா நடத்துவதை நிறுத்தாவிட்டால் விழா தொடங்கும் நாளில் புதுவை அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்துமென அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...