ஆளுநர் கிரண் பேடியுடன் அமைச்சர் கந்தசாமி சந்திப்பு

நலத் திட்டங்களை முடக்குகிறார் என ஆளுநர் கிரண் பேடியை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், நலத்துறை அமைச்சர் கந்தசாமி புதன்கிழமை திடீரென கிரண் பேடியை சந்தித்துப் பேசினார்.
Updated on
1 min read

நலத் திட்டங்களை முடக்குகிறார் என ஆளுநர் கிரண் பேடியை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், நலத்துறை அமைச்சர் கந்தசாமி புதன்கிழமை திடீரென கிரண் பேடியை சந்தித்துப் பேசினார்.

புதுவையில் அமைச்சர்கள் அனுப்பும் கோப்புகளுக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உடனடியாக அனுமதி தருவதில்லை. அந்தக் கோப்புகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் திட்டங்களை செயல்படுத்துவதற்கான நிதி எங்கே எனக் கேட்டு திருப்பி அனுப்பி விடுகிறார். அல்லது கோப்பின் மீது நடவடிக்கை எடுக்கும்படி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பி விடுகிறார். இதனால், அரசால் நலத் திட்டங்கள் நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக அமைச்சராக இருப்பதே வீண் என கந்தசாமி கூறிவந்தார்.  
இந்த நிலையில், ஆளுநர் கிரண் பேடி புதன்கிழமை பிற்பகல் அமைச்சர் கந்தசாமியை சந்தித்துப் பேச அழைப்பு விடுத்திருந்தார்.
 இதையடுத்து, அமைச்சர் கந்தசாமி, முதல்வரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமிநாராயணனுடன் ஆளுநர் மாளிகைக்குச் சென்று கிரண் பேடியை சந்தித்துப் பேசினார்.
இந்தச் சந்திப்பு சுமார் 2 மணி நேரம் நீடித்தது. சந்திப்புக்குப் பிறகு, அமைச்சர் கந்தசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஆளுநர் கிரண் பேடி பிற்பகல் சந்திக்க எனக்கு அழைப்பு விடுத்து இருந்தார். அதனை ஏற்று அவரை சந்தித்துப் பேசினேன்.
தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்கு இலவசக் கல்வி, இலவச அரிசி, சர்க்கரை உள்ளிட்டவைகளுக்கான கோப்புகள் ஆளுநர் கையெழுத்து போடாததால் தேங்கிக் கிடக்கின்றன. அக்கோப்புகளில் கையெழுத்திட்டு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டோம்.  ஆளுநருடன் சந்திப்பு
சுமுகமாக இருந்தது.  பிரச்னை முடிவுக்கு வரவேண்டும் என நினைக்கிறேன்.  ஆளுநரே தான் அழைத்தார்கள். விரைவில் எதை செய்ய முடிகிறதோ அதை செய்து தருவதாக உறுதியளித்துள்ளார். கோப்புகள் கையெழுத்தாகி வரும்போது உங்களுக்குத் தெரியும்.  
கூட்டுறவுத் துறை துணைப் பதிவாளர் பதவி நீண்ட காலம் நிலுவையில் இருந்தது. எனது துறை தொடர்பான எந்தெந்த கோப்புகள் திரும்பி வந்தது தொடர்பாக பேசினோம்.
கோப்புகள் தொடர்பாக இரு தரப்பும் பேசிக் கொண்டோம். ஏழை மக்கள் முன்னேற்றத்துக்கு தொடர்ந்து திருப்பி அனுப்பாமல் இருக்கும் நிதியை மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர பேசினோம்.
முதல்வர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். ஆலோசனை இல்லாமல் நாங்கள் எப்படி வர முடியும் என்றார்.
முதல்வரின் நாடாளுமன்ற செயலர் லட்சுமி நாராயணன் கூறுகையில், ஆளுநர் கிரண் பேடி கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தோம். நாங்களும் பேசினோம். விளக்கம் கேட்டதற்கு விளக்கம் தந்தோம். சந்தேகம் இருந்தால் மீண்டும் கேட்பார்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com