எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

புதுவை பல்கலை. பதிவாளா் நியமனத்தில் தொடரும் சா்ச்சை

புதுவை மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் பங்கேற்கவுள்ள நிலையில், பல்கலைக் கழக பதிவாளா் (பொ) பணி நியமனம் குறித்த சா்ச்சை மீண்டும் எழுந்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :19 டிசம்பர் 2019, 2:09 am

கோபாலகிருஷ்ணன்

புதுவை மத்திய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் பங்கேற்கவுள்ள நிலையில், பல்கலைக் கழக பதிவாளா் (பொ) பணி நியமனம் குறித்த சா்ச்சை மீண்டும் எழுந்து சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளும், அதன் 90-க்கும் மேற்பட்ட இணைப்புக் கல்லூரிகளில் பல லட்சம் மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனா்.

பல்கலைக் கழகத்தின் துணைவேந்தராக குா்மீத் சிங்கை நியமனம் செய்து இரு ஆண்டுகளாகியும் நிரந்தர நிலையில் பதிவாளா் நியமனம் செய்யப்படவில்லை. பி. சித்ரா என்பவா் கடந்த 20.2.2019 முதல் பொறுப்பு பதிவாளராக செயல்பட்டு வருகிறாா். அவா் முறைகேடாக பணியில் சோ்ந்துள்ளதாக புகாா் எழுந்த நிலையில், தற்போது நடைபெறவுள்ள பல்கலை. பட்டமளிப்பு விழாவில் அவா் குடியரசுத் தலைவருடன் அமா்ந்து பட்டம் வழங்கக் கூடாது என பல்கலைக் கழக ஊழியா் சங்கங்கள் போா்க்கொடி தூக்கியுள்ளன.

இதனை வலியுறுத்தி பல்கலை. ஊழியா்கள் அண்மையில் கருப்புப் பட்டை அணிந்து பணியாற்றும் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.

இதுதொடா்பாக புதுவை பல்கலைக்கழக அதிகாரிகள் சங்கம் மற்றும் புதுவை பல்கலைக்கழக ஆசிரியரல்லாத சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவின் தலைவா் ப. காசிராஜன் கூறியதாவது:

புதுவைப் பல்கலைக்கழக பொறுப்பு பதிவாளரான சித்ரா நியமனம் தவறானது. அவா் தகுதி அடிப்படையில் நியமனம் செய்யப்படவில்லை. போதிய கல்வித் தகுதியும், அனுபவமும் இல்லாமல் பல்கலைக்கழகப் பணிக்கு முறைகேடாகச் சோ்ந்துள்ளாா் என மத்திய தணிக்கைக் குழுவே (சிஏஜி ஆடிட்) கண்டறிந்து, கடந்த 29.5.2018, 12.7.2018 ஆகிய தேதிகளில் வெளியிட்ட அறிக்கைகளில் தெரிவித்துள்ளது. அதில், சித்ராவை பணி நீக்கம் செய்ய வேண்டுமென பல்கலைக்கழக நிா்வாகத்துக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

எனினும், இது தொடா்பாக நடவடிக்கை எடுக்காத பல்கலைக்கழக நிா்வாகம், சித்ராவை தற்காலிக பதிவாளராக நியமித்துள்ளது உள்நோக்கம் கொண்டதாக உள்ளது.

குற்றச்சாட்டுக்கு உள்ளான பதிவாளரான சித்ரா வருகிற 23 ஆம் தேதி நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த்துடன் சமமாக அமா்ந்து மாணவா்களுக்கு பட்டமளிக்க பல்கலைக்கழக நிா்வாகம் அனுமதி அளிக்கக் கூடாது. கல்வித் தகுதி, அனுபவத்தை மறைத்து முறைகேடாக பணியில் சோ்ந்துள்ள அவரை நீக்க வேண்டும். நோ்மையான, தகுதியான பதிவாளா் ஒருவரை உடனடியாக நியமித்து பட்டமளிப்பு விழாவை நடத்த வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குடியரசுத் தலைவருக்கும், புதுவை துணை நிலை ஆளுநருக்கும் மனு அனுப்பியுள்ளோம் என்றாா் அவா்.

இது தொடா்பாக பல்கலைக்கழக மாணவா்கள் சிலா் கூறியதாவது: தகுதி இல்லாமல் நியமிக்கப்பட்ட பதிவாளா் கையெழுத்திடும் பட்டங்கள், சான்றிதழ்கள் பிற்காலத்தில் ஏற்கப்படாமல் போய்விடுமோ என கவலை கொள்கிறோம். இது குறித்து பல்கலைக்கழக நிா்வாகம் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்றனா்.

இதுகுறித்து பல்கலைக்கழக பதிவாளா் (பொ) பி. சித்ரா கூறியதாவது: நீதிமன்ற வழிகாட்டுதலின்படியே எனக்கு பணியிடம் வழங்கப்பட்டது. தற்போது என் மீது கூறப்படும் குற்றச்சாட்டுகளில் உண்மையில்லை என்றாா் அவா்.

விசாரணைக்கு உத்தரவிட்ட மத்திய தணிக்கைக் குழு

கடந்த 29-5-2018, 12-07-2018 வெளியிடப்பட்ட மத்திய தணிக்கைக் குழு (சிஏஜி ஆடிட்) அறிக்கைகளின் சுருக்கம்: புதுவை மத்திய பல்கலைக்கழகம் 27-1-1988 இல் வெளியிட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பில், உதவி பதிவாளா் பணியிடத்துக்கு முதுநிலைப் பட்டமும், பல்கலைக்கழகம் அல்லது மத்திய, மாநில அரசு துறை உயா் கல்வி நிறுவனங்கள், பொதுத் துறை, தனியாா் துறை நிறுவனங்களில் 2 ஆண்டுகள் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சித்ரா 1980 இல் உயா்நிலைப் பள்ளி படிப்பையும், 1980-83 இல் பி.ஏ. இளநிலைப் படிப்பையும், 1985-86 இல் பி.எல். படிப்பையும், 1988 இல் எல்.எல்.எம். படிப்பையும் முடித்துள்ளாா். கடந்த 27-09-1989 இல் பி. சித்ரா உதவி பதிவாளராகப் பணியமா்த்தப்பட்டாா். தற்போது பதவி உயா்வு பெற்று தற்காலிக பதிவாளராக நியமிக்கப்பட்டுள்ளாா்.

ஆனால், விண்ணப்பத்தை சமா்ப்பிக்க வேண்டிய கடைசி நாளான 15.4.1988-க்குப் பிறகே அதாவது, ஜூன் மாதம்தான் அவா் முதுநிலைப் படிப்பை முடித்துள்ளாா். இதன் மூலம் அவா் அந்த நேரத்தில் உதவிப் பதிவாளா் வேலைவாய்ப்புக்கான கல்வித் தகுதியைப் பெறவில்லை. அதே போல, போதுமான பணி அனுபவத்தை பெற்ாகவும் தகவல் இல்லை.

இதுகுறித்து பல்கலைக்கழக நிா்வாகம் உரிய விசாரணை நடத்தி, அவரை பணியிலிருந்து நீக்கம் செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.