/

மதுக் கடையில் இளைஞர் குத்திக் கொலை

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மதுக் கடையில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On :23 ஜனவரி 2019, 8:53 am IST

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள மதுக் கடையில் செவ்வாய்க்கிழமை இரவு இளைஞர் குத்திக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி தன்வந்திரி நகர் கொக்கு பூங்கா அருகே ஜீவானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த சுப்ரமணி மகன் அருண் (31).  இவர் கிழக்கு கடற்கரை சாலையில் லாஸ்பேட்டை மடுவுப்பேட்டை அருகே உள்ள தனியார் மதுக் கடையில் உள்ள மதுபானக் கூடத்துக்கு அடிக்கடி வந்து மது அருந்துவது வழக்கமாம்.  இதே போல, செவ்வாய்க்கிழமை இரவு அருண் அந்த  மதுக் கடையில் மது அருந்த வந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் கும்பல் வேண்டுமென்றே அருணிடம் தகராறு செய்ததாகத் தெரிகிறது. 
 அப்போது இருதரப்புக்கும் அடிதடி நடந்தது. இதையடுத்து அந்தக்  கும்பலைச் சேர்ந்தவர்கள் கத்தியால் அருணை குத்தி விட்டு தப்பியோடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
கடையில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்த அருணை மீட்டு புதுச்சேரி அரசு பொதுமருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், லாஸ்பேட்டை காவல்நிலையத்துக்கும் தகவல் அளித்தனர்.  மருத்துவமனையில் அருணை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். லாஸ்பேட்டை போலீஸார் அருணின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூராய்வுக்காக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததுடன், வழக்குப் பதிந்து, அருணை கொலை செய்தவர்களைத் தேடி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாக அருண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளதாக புதுச்சேரி வடக்கு காவல் கண்காணிப்பாளர் சிந்தா கோதண்டராமன் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.