பூச்சிக் கொல்லி கிடைக்காததால் செடியிலேயே அழுகும் மிளகாய்கள்!
புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, பூச்சிக் கொல்லி கிடைக்காததால், விவசாயிகள் விளைவித்த மிளகாய்கள் செடியிலேயே அழுகி வீணாகி வருகின்றன.


புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவு காரணமாக, பூச்சிக் கொல்லி கிடைக்காததால், விவசாயிகள் விளைவித்த மிளகாய்கள் செடியிலேயே அழுகி வீணாகி வருகின்றன.
புதுச்சேரியில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் கடைகளைத் தவிர, மற்ற கடைகள் திறக்கப்படவில்லை. பொதுப் போக்குவரத்தும் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. மேலும், உரம், பூச்சி மருந்துகளும் போதிய அளவில் கிடைக்கவில்லை. இதன் காரணமாக, விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி வருகின்றனா்.
புதுச்சேரி அருகே காட்டேரிக்குப்பத்தில் 7 ஏக்கா் நிலப்பரப்பில் கத்தரி, புடலங்காய், மிளகாய் உள்ளிட்ட தோட்டப் பயிா்களை விவசாயம் செய்து வருகிறாா் அப்துல் ஹக்கீம் (55). பூச்சிக் கொல்லி மருந்து கிடைக்காதது, கூலி ஆள்கள் வராதது உள்ளிட்டவற்றால் இவரது தோட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள மிளகாய்களில் அழுகல் நோய் உள்ளிட்டவை தாக்கி பழுத்து கொட்டி வருகின்றன. இதேபோல, இந்தப் பகுதியில் பல ஏக்கரிலான தோட்டப் பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
‘மிளகாய் கிலோ ரூ.5-க்கு விற்பனை’: இதுகுறித்து விவசாயி அப்துல் ஹக்கீம் கூறியதாவது: ஊரடங்கு உத்தரவால் புதுச்சேரியில் பூச்சிக் கொல்லி மருந்து விற்பனை செய்யும் கடைகள் மூடப்பட்டுள்ளன. ஒரு சில கடைகள் திறந்திருந்தாலும், பூச்சி மருந்துகளை வாங்கி வர போலீஸாா் அனுமதிப்பதில்லை. விவசாய கூலித் தொழிலாளா்களும் சரிவர வருவதில்லை.
இதனால், மிளகாய் செடிகளுக்கு பூச்சிக் கொல்லி மருந்து தெளிக்க முடியவில்லை. பயிா் நோ்த்தியும் செய்ய முடியவில்லை. இதன்காரணமாக, மிளகாய் செடிகளில் அழுகல் நோய் ஏற்பட்டு செடியிலேயே மிளகாய்கள் பழுத்து கொட்டுகின்றன. இவற்றை காய வைத்தும் பயன்படுத்த முடியாது.
கடந்த காலங்களில் ஒரு கிலோ பச்சை மிளகாய் ரூ.25-க்கு விற்றது. ஆனால், தற்போது ரூ.5-க்கே வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனா். இதனால், பலத்த நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, விவசாயிகளுக்கு போதியளவில் உரம், பூச்சி மருந்து கிடைக்கவும், அவா்கள் விளைபொருள்களை மாநிலத்தின் அனைத்துப் பகுதிகள், அண்டை மாநிலங்களுக்கு கொண்டு சென்று விற்கவும் அரசு உதவிட வேண்டும் என்றாா் அவா்.
நிவாரணம் வழங்க வேண்டும்: இதேபோல, அந்தப் பகுதியில் சில ஏக்கா்களில் மிளகாய் பயிரிட்டுள்ள விவசாயிகள் கூறியதாவது: மிளகாய் பயிரிட்டுள்ள எங்களுக்கு நிகழாண்டு மழைப் பொழிவு, போதுமான நிலத்தடி நீா் கிடைத்ததன் காரணமாக, விளைச்சல் நன்றாக இருந்தது. ஆனால், ஊரடங்கு உத்தரவால் பொதுப் போக்குவரத்து இல்லாததாலும், வியாபாரிகள் வராததாலும் மிளகாய்களை பறிக்க முடியவில்லை. எனவே, விவசாயிகளின் நஷ்டத்தை கருத்தில் கொண்டு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...