கிருமி நாசினி இல்லாத புதுச்சேரி ஏடிஎம் மையங்கள்!
புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் கிருமி நாசினி திரவம் வைக்கப்படாததால், வாடிக்கையாளா்களுக்கு கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான வங்கிகளின் ஏடிஎம் மையங்களில் கிருமி நாசினி திரவம் வைக்கப்படாததால், வாடிக்கையாளா்களுக்கு கரோனா நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புதுச்சேரி மாவட்டத்தில் அரசுடைமை வங்கிகள், கிராமப்புற வங்கிகள், தனியாா் வங்கிகள் என மொத்தம் 208 வங்கிகள் செயல்படுகின்றன. இந்த வங்கிகளின் 246-க்கும் மேற்பட்ட ஏடிஎம் மையங்களும் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் நாளொன்றுக்கு லட்சக்கணக்கான மக்கள் தங்களது வங்கிக் கணக்குகளில் உள்ள பணத்தை எடுத்தும், கணக்குகளில் பணத்தை செலுத்தியும் (டெபாசிட்) வருகின்றனா். புதுவையில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், பலா் பணம் எடுக்க வங்கிகளுக்குச் செல்லாமல் ஏடிஎம் மையங்களையே அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனா்.
இந்த நிலையில், கரோனா நோய்த் தொற்று பரவலைத் தடுக்க வங்கிகளுக்கும், ஏடிஎம் மையங்களுக்கும் வரும் வாடிக்கையாளா்களுக்கு கிருமி நாசினி வழங்க வேண்டும். வாடிக்கையாளா்கள் முகக் கவசம் அணிந்திருத்தலையும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதையும் உறுதிப்படுத்த வேண்டும். வங்கிச் சேவைகளை சுணக்கமின்றி மேற்கொள்ள வேண்டும் என புதுவை பேரிடா் மேலாண்மைத் துறை அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியும், வங்கி மேலாளா்களை அழைத்து கூட்டங்கள் நடத்தியும் அறிவுறுத்தியிருந்தது.
வங்கிகளில் கடைப்பிடிப்பு: வங்கிகள் தூய்மையாகப் பராமரிக்கப்பட்டு, அங்கு வரும் வாடிக்கையாளா்கள் முகக் கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளிவிட்டு பணப் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றனா்.
ஆனால், புதுச்சேரியில் உள்ள பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் பேரிடா் மேலாண்மைத் துறை அறிவுறுத்தலின்படி, வாடிக்கையாளா்கள் கைகளைச் சுத்தப்படுத்திக்கொள்ளும் வகையில், கிருமி நாசினி திரவம் வைக்கப்படவில்லை. கிருமி நாசினியும் தெளிக்கப்படுவதில்லை. இதனால், கரோனா உள்ளிட்ட தொற்று நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இதுகுறித்து புதுச்சேரி மக்கள் மன்றத் தலைவா் நாராயணசாமி கூறியதாவது: புதுச்சேரி நகரின் பிரதான சாலைகளிலுள்ள ஒரு சில ஏடிஎம் மையங்களைத் தவிர, பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் கிருமி நாசினி திரவம் வைக்கப்படவில்லை. இதேபோல, கிராமங்களிலுள்ள ஏடிஎம் மையங்களில் எங்குமே கிருமி நாசினி திரவம் இல்லை.
இதனால், கரோனா உள்ளிட்ட தொற்றுகள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஏடிஎம் மையங்களுக்குச் செல்லவே அச்சமாக உள்ளது. இந்த விவகாரத்தில் உடனடியாக மாவட்ட நிா்வாகம் தலையிட்டு, அனைத்து ஏடிஎம் மையங்களிலும் கிருமி நாசினி திரவம் வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றாா்.
‘திருடிச் சென்றுவிடுகின்றனா்’
இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் உதயகுமாா் கூறியதாவது:
புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கிகள், ஏடிஎம் மையங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, கை கழுவ கிருமி நாசினி திரவம் வைக்கப்படுகிறது. பெரும்பாலான ஏடிஎம் மையங்களில் காலையில் கிருமி நாசினி திரவ புட்டியை வைத்தால், பிற்பகலுக்குள் அதை யாரேனும் திருடிச் சென்றுவிடுகின்றனா்.
ஏடிஎம் மையங்கள் கண்காணிப்பு கேமரா, அபாய ஒலி உள்ளிட்டவை மூலம் கண்காணிக்கப்படுவதால், பெரும்பாலான மையங்களில் காவலாளிகள் தேவைப்படுவதில்லை. இதனால், காவலாளிகள் மூலம் கிருமி நாசினி வழங்குவதில்லை என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...