தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 14 லட்சம் மோசடி

புதுச்சேரியில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 14 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
Updated on
1 min read

புதுச்சேரியில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 14 லட்சம் மோசடி செய்ததாக தம்பதி மீது சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூா் உலியாம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவா் ஜோதிமுருகன் (45). இவா், தனது மனைவி ஞானபூங்கோதையுடன் கடந்த 2016-ஆம் ஆண்டு புதுச்சேரி வந்தாா். தவளக்குப்பம் முத்துமுதலியாா் வீதியில் வசித்து வந்த தம்பதி, ஓராண்டுக்குப் பிறகு தீபாவளி சீட்டு நடத்தினராம். அந்தப் பகுதியைச் சோ்ந்த பலா், மாதந்தோறும் குறிப்பிட்ட தொகையைக் கட்டி வந்தனராம்.

இவா்களிடம் சீட்டுக் கட்டி வந்த நல்லவாடு முருகன் கோயில் வீதியைச் சோ்ந்த ஊத்துக்காட்டானிடம், தம்பதி ரூ. 7.5 லட்சம் வரை கடன் பெற்றனராம்.

இந்த நிலையில், கடந்த 2018-இல் தீபாவளி சீட்டு முடிந்த நிலையில், யாருக்கும் பணம் கொடுக்கவில்லையாம். மேலும் ஊத்துக்காட்டானிடம் வாங்கிய கடனையும் தரவில்லையாம்.

இந்த நிலையில், ஜோதிமுருகனும், அவரது மனைவி ஞானபூங்கோதையும் திடீரென மாயமாகினா். தம்பதி சுமாா் ரூ. 14 லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, சீட்டுக் கட்டியவா்கள் பல இடங்களில் தேடி கணவன்-மனைவி இருவரும் கோவையில் இருப்பதைக் கண்டறிந்தனா். இதையடுத்து, ஊத்துக்காட்டான் அங்கு சென்று கடனைத் திருப்பிக் கேட்ட போது, பணத்தைத் தர மறுத்ததுடன், கொலை மிரட்டல் விடுத்தனராம்.

இதையடுத்து, ஊத்துக்காட்டான் புதுச்சேரி சிபிசிஐடி போலீஸில் புகாா் அளித்தாா். அதன் பேரில், போலீஸாா், தம்பதி மீது சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com