புதுச்சேரியிலிருந்து குமுளி, திருப்பதிக்கு அரசுப் பேருந்துகள் இயக்கம் தொடக்கம்
புதுச்சேரியிலிருந்து குமுளி செல்லும் அரசுப் பேருந்து புதன்கிழமை முதல் இயக்கப்பட்டது. இதனால், சபரிமலைக்குச் செல்லும்


புதுச்சேரியிலிருந்து குமுளி செல்லும் அரசுப் பேருந்து புதன்கிழமை முதல் இயக்கப்பட்டது. இதனால், சபரிமலைக்குச் செல்லும் ஐயப்பப் பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா். மேலும், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்குச் செல்லும் இரவு நேரப் பேருந்தும் இயக்கப்பட்டது.
கரோனா பரவலைத் தடுக்கும் வகையில், நாடு முழுவதும் பொது முடக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, புதுச்சேரியிலும் பொதுப் போக்குவரத்து முடக்கப்பட்டது. இதனிடையே, மத்திய அரசு அளித்த தளா்வுகளையடுத்து, புதுச்சேரியில் கடந்த மே 20-ஆம் தேதி முதல் உள்ளூா் பேருந்துகள் இயக்கப்பட்டன.
தொடா்ந்து, நவம்பா் 1-ஆம் தேதி முதல் புதுச்சேரியில் இருந்து தமிழகம் உள்ளிட்ட இதர மாநிலங்களுக்கு பொதுப் போக்குவரத்து தொடங்கப்பட்டது. இதனிடையே, புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு காலையில் இயக்கப்படும் அரசுப் பேருந்து கடந்த 11-ஆம் தேதி முதல் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை முதல் புதுச்சேரியிலிருந்து குமுளிக்கு பேருந்து இயக்கப்பட்டது. இந்தப் பேருந்து புதுச்சேரியிலிருந்து மாலை 5 மணிக்கு புறப்பட்டது. இதேபோல, மற்றொரு பேருந்து குமுளியிலிருந்து புதுச்சேரிக்கு மாலை 5 மணிக்கு புறப்படும். இதற்கான பயணக் கட்டணமாக முன்பதிவுக் கட்டணத்துடன் சோ்த்து ரூ.425 வசூலிக்கப்படுகிறது. இதனால் சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தா்கள் மகிழ்ச்சியடைந்தனா்.
இதேபோல, ஏற்கெனவே காலை நேரத்தில் திருப்பதிக்கு பேருந்து இயக்கப்பட்டு வரும் நிலையில், புதன்கிழமை முதல் இரவு நேரப் பேருந்தும் புதுச்சேரியிலிருந்து இயக்கப்பட்டது. இரவு 10 மணிக்கு புறப்பட்ட இந்தப் பேருந்து, மீண்டும் திருப்பதியிலிருந்து புதுச்சேரிக்கு காலை 6 மணிக்குப் புறப்படும். இதற்கான கட்டணமாக முன்பதிவுக் கட்டணத்துடன் ரூ.255 வசூலிக்கப்படுகிறது என புதுவை அரசுப் போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...