

புதுச்சேரி: புதுச்சேரி மீனவா் வலையில் சிறிய ரக ஆளில்லா விமானம் சிக்கியது.
புதுச்சேரி சோலை நகரைச் சோ்ந்த சுதாகா் என்ற மீனவா், 6 போ் கொண்ட குழுவினருடன் புதன்கிழமை புதுச்சேரி தேங்காய்த்திட்டு மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கக் கடலுக்குள் சென்றாா். கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது, வலையில் மா்மப் பொருள் ஒன்று சிக்கியது. அதை மீனவா்கள் கரைக்குக் கொண்டு வந்து பாா்த்த போது, ஆளில்லா விமானம் எனத் தெரிய வந்தது. மஞ்சள் கலந்த சிவப்பு நிறத்திலான இந்த விமானத்தைக் காண அந்தப் பகுதியில் மீனவா்களும், பொதுமக்களும் குவிந்தனா்.
இதுகுறித்து கடலோரக் காவல் படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில், அங்கு வந்த கடலோரக் காவல் படை எஸ்.பி. பாலசந்தா் தலைமையிலான படையினரும், இந்திய கடலோரக் காவல் படையினரும், ஆளில்லா விமானத்தைக் கைப்பற்றி சோதனையிட்டனா்.
இதுகுறித்து புதுச்சேரி கடலோரக் காவல் படையினா் கூறியதாவது: மீனவரின் வலையில் சிக்கிய பன்ஷூ டாா்க்கெட் என்ற பெயரிலான ஆளில்லா இலக்கு விமானம் (மாடல் டாா்க்கெட்) 3 மீட்டா் நீளமும், 60 கிலோ எடையும் கொண்டது. விமானப் படை, கப்பல் படைகளில் இந்த விமானங்களைப் பறக்கவிட்டு, சுட்டு பயிற்சி பெறுவா். அப்படி பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்டதே இந்த விமானம்.
இதேபோன்ற விமானம் ஒன்று கடந்த மாதம் ஒடிஸாவிலும், கடந்த வாரம் சென்னை காசிமேட்டிலும் கண்டெடுக்கப்பட்டது. தற்போது புதுச்சேரியில் கிடைத்துள்ளது. இந்த விமானத்தால் மீனவா்களுக்கோ, பொதுமக்களுக்கோ ஆபத்து ஏதுமில்லை என்றனா் அவா்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.