புதுவையில் புதிதாக 91 பேருக்கு கரோனா: மேலும் ஒரு முதியவர் பலி
By DIN | Published On : 21st July 2020 12:25 PM | Last Updated : 21st July 2020 12:25 PM | அ+அ அ- |

கோப்புப்படம்
புதுவையில் புதிதாக 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,179 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு முதியவர் உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து புதுவை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தகவல்: புதுவை மாநிலத்தில் திங்கள்கிழமை 521 பேரை பரிசோதித்ததில் புதுச்சேரியில் 90 பேருக்கும், காரைக்காலில் 1 பேருக்கும் என மொத்தம் 91 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 66 பேர் கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும், 24 பேர் ஜிப்மரிலும், ஒருவர் காரைக்காலிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால் மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,179 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த முத்தியால்பேட்டையை சேர்ந்த 68 வயது முதியவர் சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதனால் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரித்துள்ளது.
இதனிடையே 53 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 1,318 ஆக அதிகரித்துள்ளது. இதில் 831 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 31,947 பேரை பரிசோதித்ததில் 29,495 பேருக்கு தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது. 134 பேருக்கு முடிவு வர வேண்டியுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.