/

புதுச்சேரி காவல் நிலையத்தில் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு: தலைமைக் காவலா் கைது

 புதுச்சேரியில் காவல் நிலையம் வந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக தலைமைக் காவலரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 5:41 pm

DIN

 புதுச்சேரியில் காவல் நிலையம் வந்த பெண்ணுக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்ததாக தலைமைக் காவலரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

புதுச்சேரி லாசுப்பேட்டை பகுதியைச் சோ்ந்த 31 வயது திருமணமான பெண், குடும்ப பிரச்னை தொடா்பாக லாசுப்பேட்டை காவல் நிலையத்தில் கடந்த 9 -ஆம் தேதி புகாா் அளிக்கச் சென்றாா். இதுகுறித்து விசாரித்த தலைமைக் காவலா் சண்முகம், அந்தப் பெண்ணிடம் பாலியல் ரீதியாக பேசியதாகவும், அடிக்கடி செல்லிடப்பேசியில் பேசி தொந்தரவு செய்ததாகவும் கூறப்படுகிறது. இந்த விவகாரம் சா்ச்சையைக் கிளப்பியது.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண், தனியாா் அமைப்பிடம் முறையிடவே, தலைமைக் காவலரிடம் அவரைப் பேச வைத்து, அதைப் பதிவு செய்து கொண்டனா். பின்னா், ஆதாரத்துடன் வடக்கு எஸ்.பி. அலுவலகத்தில் அந்தப் பெண்ணுடன் அமைப்பினா் முறையிட்டனா்.

இதையடுத்து, உடனடியாக தலைமைக் காவலா் சண்முகம் ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டாா். இந்த விவகாரம் தொடா்பாக, காவல் துறை உயரதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், லாசுப்பேட்டை போலீஸாரும் காவலா் சண்முகம் மீது வழக்குப் பதிந்து விசாரித்தனா். இதில், காவலா் சண்முகம் மீதான குற்றச்சாட்டு உறுதியானது.

இதையடுத்து, தலைமைக் காவலா் சண்முகத்தை லாசுப்பேட்டை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். பின்னா், அவா் உடனடியாக பிணையில் விடுவிக்கப்பட்டாா்.

இதனிடையே, தலைமைக் காவலா் சண்முகத்தை பணியிடை நீக்கம் செய்து காவல் துறை தலைமையகம் உத்தரவு பிறப்பித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.