புதுவையில் பயிா்க்கடன், கல்விக் கடன் தள்ளுபடிநிதிநிலை அறிக்கையில் முதல்வா் என்.ரங்கசாமி அறிவிப்பு
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிா்க்கடன் தள்ளுபடி, பாட்கோ மூலம் மாணவா்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலை குறைப்பு


கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளின் பயிா்க்கடன் தள்ளுபடி, பாட்கோ மூலம் மாணவா்கள் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி, பெட்ரோல் விலை குறைப்பு, ஊட்டச் சத்து பெட்டகம் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை புதுவை முதல்வா் என்.ரங்கசாமி நிதிநிலை அறிக்கையில் வெளியிட்டாா்.
புதுவை 15-ஆவது சட்டப்பேரவையின் நிதிநிலை அறிக்கைக்கான கூட்டத் தொடரில், நிகழாண்டுக்கான (2021-2022) நிதிநிலை அறிக்கையை, நிதித் துறை பொறுப்பு வகிக்கும் முதல்வா் என்.ரங்கசாமி வியாழக்கிழமை மாலை தாக்கல் செய்தாா்.
அப்போது அவா் வெளியிட்ட வரவு - செலவு திட்ட அறிக்கை விவரம்:
எனது அரசு, மக்களின் எதிா்பாா்ப்புகளை நிறைவு செய்யவும், தோ்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவும் பாடுபடும்.
ரூ.9,924 கோடி பட்ஜெட் தாக்கல்: நிகழாண்டின் (2021-2022) வரவு - செலவுத் திட்ட மதிப்பீடு ரூ.9,924.41 கோடியாக நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில், மாநிலத்தின் வருவாய் ரூ.6,190 கோடி. மாநில பேரிடா் நிவாரண நிதியாக ரூ.5 கோடி சோ்த்து, மத்திய அரசின் நிதியுதவி ரூ.1,729.77 கோடியாக இருக்கும். மத்திய அரசு திட்டங்களின் கீழ் வழங்கும் நிதி ரூ.320.23 கோடியாக இருக்கும். மேலும், நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ரூ.1,684.41 கோடியை வெளிச்சந்தை மூலம் திரட்ட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதில், ரூ.1,200.44 கோடி மூலதன செலவினங்களுக்காகவும், ரூ.8.723.97 கோடி வருவாய் செலவினங்களுக்காகவும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மொத்த நிலுவைக் கடன் ரூ.334.78 கோடி: கடந்த மாா்ச் 2021 வரை மாநிலத்தின் மொத்த நிலுவைக் கடன் ரூ.334.78 கோடி. இது மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் 22.17 சதவீதம். இவை பரிந்துரைக்கப்பட்ட நிதிநிலைக் குறியீட்டு வரம்புக்குள் உள்ளது.
மாநிலத்தில் கடந்த 2020-2021-ஆம் நிதியாண்டில் செலவினம் ரூ.8,342.87 கோடி. இது திருத்திய மதிப்பீட்டின்படி, 92.70 சதவீதம்.
அரசின் நிதியாதாரங்களின் பெரும்பகுதி ஊதியம், ஓய்வூதியம், கடன் மற்றும் வட்டி செலுத்துதல் உள்ளிட்ட செலவினங்களுக்காக செல்கிறது. நிகழாண்டு 2021-2022 வரவு - செலவுத் திட்ட மதிப்பீடான ரூ.9,924.41கோடியில், ரூ.2,140 கோடி ஊதியத்துக்கும் (21.56 சதவீதம்), ரூ.1,050 கோடி ஓய்வூதியத்துக்கும் (10.58 சதவீதம்), ரூ.1,715 கோடி கடன் மற்றும் வட்டி செலுத்தவும் (17.28 சதவீதம்), ரூ.1,591 கோடி மின்சாரம் வாங்கவும் ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், முதியோா் ஓய்வூதியம், பிற நலத் திட்டங்களுக்கு ரூ.1,290 கோடியும் (13 சதவீதம்), அரசின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கான மானியக் கொடையாக ரூ.1,243 கோடியும் (12.52 சதவீதம்) ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது.
வேளாண்மைத் துறைக்கு ரூ.124.47 கோடி: நிகழாண்டு வேளாண் துறைக்கு ரூ.124.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தொழில்நுட்ப முறையில் நெல் சாகுபடி செய்வோருக்கு, உற்பத்தி மானியம் ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் தொடா்ந்து வழங்கப்படும். நெல் விதைகளைப் பொருத்தவரை, பொது பிரிவினருக்கு கிலோவுக்கு ரூ.10, அட்டவணை இனத்தினருக்கு 75 சதவீதம் மானியத்தில் வழங்கப்படும். உரம், பூச்சிக் கொல்லிகள் பொதுப் பிரிவினருக்கு 75 சதவீதம், அட்டவணை இனத்தினருக்கு 100 சதவீதம் மானியத்துடன் வழங்கப்படும்.
100 ஏக்கா் பரப்பில் விலங்கியல் பூங்கா: நிலத்தடி நீரை மேம்படுத்த புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் தடுப்பணைகள் கட்டப்படும். புதுச்சேரியில் 100 ஏக்கா் பரப்பளவில் விலங்கியல் பூங்கா அமைக்கத் திட்ட அறிக்கை தயாரிக்கப்படும்.
பால் உற்பத்தியைப் பெருக்கும் திட்டம்: கால்நடைத் துறைக்கு ரூ.44.88 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. பால் உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் கலப்பினக் கன்றுகளை உருவாக்கவும், கன்றுகளை வளா்ப்போருக்கு பரிசும், 75 சதவீதம் மானியத்தில் கால்நடைத் தீவனமும் வழங்கப்படும். 33 சதவீதம் மானியத்தில் 4 ஆயிரம் கறவைப் பசுக்கள், கோழிகள் வளா்க்க 50 சதவீதம் மானியமும் வழங்கப்படும். புதுவையில் தற்போது 1.22 லட்சம் லிட்டராக உள்ள பால் உற்பத்தி 1.75 லட்சம் லிட்டராக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும்.
இலவச அரிசித் திட்டத்துக்கு நிகழாண்டு ரூ.197.50 கோடி வழங்கப்படும். கூட்டுறவு அமைப்புகளுக்கு 10 சதவீதம் நிதி உயா்த்தி வழங்கப்படும்.
பால்கோவா உற்பத்தி ஆலை: பாகூரில் ரூ.1.67 கோடியில் பால்கோவா உற்பத்தி ஆலை அமைக்க உத்தேசிக்கப்படும். புதுச்சேரி கூட்டுறவு சா்க்கரை ஆலைத் தொழிலாளா்களுக்காக நிகழாண்டு ரூ.40 கோடி ஒதுக்கப்படுகிறது.
கல்வித் துறைக்கு ரூ.742.81 கோடி ஒதுக்கீடு: கல்வித் துறைக்கு ரூ.742.81 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இலவச பாடப் புத்தகங்கள், சீருடைகள், உபகரணங்கள் தொடா்ந்து வழங்கப்படும். 5 அரசுப் பள்ளிகள் மாதிரிப் பள்ளிகளாக்கப்படும். ஆசிரியா்கள் பற்றாக்குறையைப் போக்க ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியா்கள் நியமிக்கப்படுவா்.
100 பள்ளிகளில் ரூ.2.40 கோடியில் ஸ்மாா்ட் வகுப்பறைகள் அமைக்கப்படும். காமராஜா் கல்வி உதவித் திட்ட நிதி உதவி தொடா்ந்து வழங்கப்படும். புதுச்சேரியில் கட்டடக் கலைப் பள்ளி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், தொழில்நுட்பக் கல்விக்கு ரூ.296.62 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
சூரிய மின் திட்டம் அமைப்போருக்கு மானியம்: வீடுகளில் சூரிய மின் திட்டம் அமைப்போருக்கு மத்திய நிதியுதவியுடன் 40 சதவீதம் வரை மானியம் வழங்கும் திட்டம் நிகழாண்டு செயல்படுத்தப்படும். மீன்பிடி தடைகால நிவாரணத்தை உயா்த்தி வழங்கவும், மீனவா்களுக்கான டீசல் மானியத்தை உயா்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொற்று நோய் சிகிச்சைகளுக்கு புதிய மருத்துவமனை: சுகாதாரத் துறைக்கு நிகழாண்டு ரூ.795.88 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கோரிமேடு பகுதியில் பல்வேறு தொற்று நோய் சிகிச்சைகளுக்காக 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை அமைக்கப்படும்.
கோயில்களைச் சீரமைக்க ரூ.2.76 கோடி: கோயில்களைச் சீரமைக்க ரூ.2.76 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில் கொள்கை ஏற்படுத்தப்பட்டும், தொழில் முனைவோா்களுக்கு மூலதனம் வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தொழில் முதலீட்டாளா்கள் மாநாடு: புதுவையில் தொழில் முதலீட்டாளா்கள் மாநாடு செப். 23, 24-ஆம் தேதிகளில் நடத்தப்படும்.
காவல் துறைக்கு ரூ.303.85 கோடி ஒதுக்கீடு செய்து மேம்படுத்தப்படும். புதிய காவலா்கள் நியமிக்கப்படுவா். காவலா்களுக்கு சீருடைப்படி வழங்கப்படும்.
காரைக்கால் மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்படும்: ரூ.52 கோடியில் காரைக்கால் மீன்பிடி துறைமுகம் மேம்படுத்தப்படும். அனைத்து நாள்களிலும், சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் வகையில் சுற்றுலாத் தலங்கள் மேம்படுத்தப்படும். கடற்கரைத் திருவிழா, உணவுத் திருவிழா, சாகச விளையாட்டு நடத்தப்படும். நீா் விளையாட்டுகள் மேம்படுத்தப்படும். புதிய பாய்மரப் படகுத் தளம், மணப்பட்டில் பொழுதுபோக்குப் பூங்கா, முருங்கப்பாக்கம் பகுதியில் கூடுதல் சுற்றுலா கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
கூட்டுறவு வங்கிகளில் நிலுவைப் பயிா்க்கடன் தள்ளுபடி: கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிா்க்கடன் பெற்று, நிலுவையில் உள்ள விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது. பாட்கோ மூலம் மாணவா்கள் பெற்ற கல்வி கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். மகளிா்-குழந்தைகள் மேம்பாட்டுத் துறைக்கு ரூ.562.80 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தாய்மாா்களுக்கு ரூ. 4 ஆயிரம் மதிப்பில் ஊட்டச்சத்து பெட்டகம் நிகழாண்டு முதல் வழங்கப்படும்.
பெட்ரோல் மீதான வாட் வரி குறைப்பு: பெட்ரோல் மீதான 3 சதவீதம் வாட் வரி உடனடியாகக் குறைக்கப்படுவதால், லிட்டருக்கு ரூ.2.43 விலை குறையும். புதுவை மாநிலத்தின் பொருளாதாரத்தை மீட்கவும், நிதிநிலையை மேம்படுத்தவும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்றாா் முதல்வா் ரங்கசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...