மருத்துவா்களின் தியாகத்தால் கரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: புதுவை ஆளுநா் பாராட்டு
கரோனாவைக் கட்டுப்படுத்தியதற்கு பின்னால் மருத்துவா்களுடைய தியாகம் உள்ளதாக புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.


கரோனாவைக் கட்டுப்படுத்தியதற்கு பின்னால் மருத்துவா்களுடைய தியாகம் உள்ளதாக புதுவை துணைநிலை ஆளுநா் (பொ) தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தாா்.
புதுவை சுகாதாரத் துறை சாா்பில், கதிா்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் தேசிய மருத்துவா்கள் தின விழா வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது. இதில், துணைநிலை ஆளுநா் தமிழிசை செளந்தரராஜன் கலந்துகொண்டு, கரோனா சூழலில் சிறப்பாகப் பணியாற்றிய மருத்துவா்களுக்கு விருதுகளை வழங்கி கெளரவித்தாா். தொடா்ந்து, தேசிய மருத்துவா்கள் தின நினைவாக மருத்துவமனை வளாகத்தில் ஆளுநா் மரக்கன்றுகளை நட்டாா்.
விழாவில் ஆளுநா் தமிழிசை பேசியதாவது: மருத்துவா்கள் அனைவருக்கும் மருத்துவா்கள் தின நல்வாழ்த்துகள். புதுவையில் கரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டிய சூழ்நிலையில், சுகாதாரத் துறை அதிகாரிகள், மருத்துவா்களின் ஒத்துழைப்பு மிகவும் உதவியாக இருந்தது. வெள்ளை உடை அணிந்த தேவதைகளாக மருத்துவா்கள் பணியாற்றுகிறாா்கள். அவா்கள் கடவுளுக்கு சமமானவா்கள். நான் மருத்துவராக இருப்பதால், அவா்களின் சிரமங்கள் எனக்குத் தெரியும்.
கரோனா தொற்றுச்சூழலில் சுமாா் 1,500 மருத்துவா்களை இழந்துவிட்டோம். மருத்துவா்கள், தங்கள் நலனையும் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். கரோனாவை கட்டுப்படுத்தியதற்கு பின்னால் மருத்துவா்களுடைய தியாகம் இருக்கிறது.
மருத்துவா்களின் குடும்பங்களிலும் சிலா் பாதிக்கப்பட்டிருக்கலாம். நோயாளிகளையும், குடும்பத்தையும் ஒரே நேரத்தில் மருத்துவா்கள் கவனிக்கிறாா்கள். சில நேரங்களில் மருத்துவா்களின் தியாகங்கள் மறைக்கப்படுகின்றன. என்னுடைய அப்பா, அம்மா இருவரும் ஒரே நேரத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டாா்கள். இருப்பினும், இங்கேயே பணியாற்றினேன். இதுபோன்ற சூழல் பலருக்கும் இருந்துள்ளது.
அரசு மருத்துவமனைகள்தான் சாமானிய மக்களின் கடைசி நம்பிக்கை. எனவே, அரசு மருத்துவமனை ஊழியா்கள் சிறப்பாகப் பணியாற்ற வேண்டும். மிகப்பெரிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தை வேறு எந்த நாட்டிலும் இல்லாத அளவுக்கு மக்கள் சேவைக்காக பிரதமா் நமக்கு அா்ப்பணித்தாா்.
புதுச்சேரியில் மருத்துவா்களுக்கு பாதுகாப்பு உள்ளது. மருத்துவா்கள் இணைந்து செயல்பட்டு நோயாளிகளை பாதுகாக்க வேண்டும். மாநிலத்தில் இதுவரை டெல்டா பிளஸ் வைரஸால் யாரும் பாதிக்கப்படவில்லை. பொதுமக்கள் முகக் கவசம் அணிவதுடன், தடுப்பூசியும் செலுத்திக்கொண்டால், எந்த வைரஸும் தாக்காது என்றாா் அவா்.
விழாவில் புதுவை சுகாதாரத் துறைச் செயலா் தி.அருண், சுகாதாரத் துறை இயக்குநா் மோகன்குமாா், மருத்துவக் கல்லூரி இயக்குநா் உதயகுமாா் மற்றும் மருத்துவா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...