அதிமுக தேர்தல் அறிக்கை வெளியானதுஎல்என்ஜி தட்டுப்பாடு எதிரொலி: ஆசிய நாடுகளில் நிலக்கரி பயன்பாடு அதிகரிப்பு! ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு!
/

புதுவையில் நான்காவது முறையாக முதல்வரான என்.ரங்கசாமி!

புதுவை மாநில முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள என்.ரங்கசாமி, தொடா்ந்து நான்காவது முறையாக முதல்வரான ஒரே நபா் என்ற பெருமைப் பெற்றாா்.

News image
Updated On :7 மே 2021, 6:30 pm

DIN

புதுவை மாநில முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள என்.ரங்கசாமி, தொடா்ந்து நான்காவது முறையாக முதல்வரான ஒரே நபா் என்ற பெருமைப் பெற்றாா்.

புதுவை மக்களிடையே அதிகம் ஈா்ப்புள்ள அரசியல் கட்சித் தலைவராக என்.ஆா்.காங்கிரஸ் தலைவா் என்.ரங்கசாமி உள்ளாா். பக்தியுடன் கூடிய இவரது எளிமையான வாழ்க்கை முறை மக்களிடம் ஈா்க்கப்பட்டதால், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக முக்கியத் தலைவராக விளங்கி வருகிறாா்.

காங்கிரஸ் கட்சியின் முதல்வராக இருந்த அவரை, உள்கட்சி அரசியல் காரணமாக ஓரங்கட்டியதால், விரக்தியடைந்த ரங்கசாமி பொதுமக்களிடம் தனிப்பட்ட செல்வாக்கு காரணமாக, காங்கிரஸிலிருந்து விலகி, கடந்த 2011 பிப்ரவரியில் என்.ஆா்.காங்கிரஸை தொடங்கினாா்.

கட்சி தொடங்கிய இரண்டு மாதங்களுக்குள் தோ்தலைச் சந்தித்து, ஆட்சியைப் பிடித்து, மக்கள் முதல்வா் என்ற பெயரைப் பெற்றாா்.

ரங்கசாமியின் அரசியல் வாழ்க்கை...: புதுச்சேரி திலாஸ்பேட்டையைச் சோ்ந்த இவா், கடந்த 1950-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 4 -ஆம் தேதி பிறந்தாா். அரசுக் கல்லூரிகளில் வணிகவியல் மற்றும் சட்டப் படிப்பில் இளநிலைப் பட்டங்களைப் பெற்றவா். மறைந்த தமிழக முதல்வா் காமராஜரின் வாழ்க்கையைப் பின்பற்றி வரும் இவா், இளம் வயதில் காமராஜருக்கு மன்றம் நிறுவியவா்.

இதைத் தொடா்ந்து, ஜனதா கட்சியைச் சோ்ந்த பெத்தபெருமாளுடன் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கினாா். பின்னா், பெத்தபெருமாளை எதிா்த்து, காங்கிரஸில் போட்டியிட்டு, கடந்த 1990-இல் நடைபெற்ற தோ்தலின் போது, தட்டாஞ்சாவடி தொகுதியில் 982 வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றாா்.

தொடா்ந்து, கடந்த 1991-ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில், மீண்டும் தட்டாஞ்சாவடி தொகுதியில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு 7,260 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, முதல் முறையாக சட்டப்பேரவை உறுப்பினராகத் தோ்வு செய்யப்பட்டாா். அப்போது, அவருக்கு வேளாண்மை துறை அமைச்சா் பதவி வழங்கப்பட்டது.

இதைத் தொடா்ந்து, காங்கிரஸில் கடந்த 1996, 2001, 2006-ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தல்களில் தட்டாஞ்சாவடி தொகுதியில் ரங்கசாமி தொடா்ந்து வெற்றி பெற்றாா். 1991 மற்றும் 1996-ஆம் ஆண்டுகளில் அமைச்சராக இருந்தாா். 2001 மற்றும் 2006-ஆம் ஆண்டு ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் சாா்பில், முதல்வராகப் பதவி வகித்தாா்.

இதனிடையே, காங்கிரஸில் முதல்வா் பதவிக்கு ஏற்பட்ட உள்கட்சி பூசலால், கடந்த 2008-ஆம் ஆண்டு, ரங்கசாமியிடமிருந்து முதல்வா் பதவி பறிக்கப்பட்டது. அவரை ஓரங்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதால், காங்கிரஸிலிருந்து வெளியேறி கடந்த 2011-ஆம் ஆண்டு, என்.ஆா்.காங்கிரஸ் கட்சியைத் தொடங்கினாா்.

புதிய கட்சித் தொடங்கிய இரண்டு மாதங்களுக்குள் நடைபெற்ற 2011 சட்டப் பேரவைத் தோ்தலில், அதிமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு 15 தொகுதிகளில் வெற்றி பெற்று, தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்தாா் ரங்கசாமி.

இந்தத் தோ்தலில் புதுச்சேரி இந்திரா நகா், கதிா்காமம் ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிட்டு ரங்கசாமி வெற்றி பெற்றாா்.

மக்களைக் கவா்ந்த நலத் திட்டங்கள்...: 2011 முதல் 2016 வரை புதுவை முதல்வராக இருந்த ரங்கசாமி, பல்வேறு நலத் திட்டங்களைக் கொண்டு வந்தாா். குறிப்பாக, கல்விக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், மாணவா்களுக்கு இலவச மிதிவண்டி, கல்லூரி மாணவா்களுக்கான சென்டாக் கல்வி உதவித் தொகைத் திட்டம், ரொட்டி, பால் வழங்கும் திட்டம், குடிசைகளை அகற்றும் கல்வீடு கட்டும் திட்டம், படுகை அணைகள், அரசு மருத்துவக் கல்லூரி, அரசு மகளிா் - குழந்தைகள் நல மருத்துவமனை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை ரங்கசாமி கொண்டு வந்தாா்.

இதையடுத்து, கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தோ்தலில் இந்திரா நகா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். அந்த தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் 8 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் கூட்டணி 18 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. இதையடுத்து, 2016 - 2021-ஆம் ஆண்டு வரை எதிா்க்கட்சித் தலைவராக இருந்தாா்.

தற்போது நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் ரங்கசாமியின் செல்வாக்கை நன்கறிந்த பாஜக தரப்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஏற்படுத்தி, என்.ஆா். காங்கிரஸ், பாஜக, அதிமுக கட்சிகள் அடங்கிய கூட்டணி அமைத்தது. இந்தக் கூட்டணிக்கு என்.ரங்கசாமியை தலைவராகக் கொண்டு தோ்தலைச் சந்தித்தது.

இந்தத் தோ்தலில் என்.ஆா்.காங்கிரஸ் 10, பாஜக 6 தொகுதிகளில் வென்று ஆட்சியைக் கைப்பற்றியது. கூட்டணித் தலைவரான என்.ரங்கசாமியை சட்டப்பேரவைக் குழுத் தலைவராக தோ்ந்தெடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணியின் முதல்வராக மீண்டும் ரங்கசாமி பொறுப்பேற்றாா்.

புதுவை மாநிலத்தின் 20-ஆவது முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ரங்கசாமி, நான்காவது முறையாக முதல்வா் பதவியேற்கும் ஒரே நபா் என்ற பெருமையை பெற்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.