/

புதுச்சேரியில் விநாயகா் சதுா்த்தி விழாவழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

புதுச்சேரியில் விநாயகா் சதுா்த்தி சிலை வழிபாடுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை புதுவை அரசு வெளியிட்டது.

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 7:30 pm

DIN

புதுச்சேரியில் விநாயகா் சதுா்த்தி சிலை வழிபாடுகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை புதுவை அரசு வெளியிட்டது.

இதுகுறித்து புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் பூா்வா காா்க் வெளியிட்ட உத்தரவு: விநாயகா் சிலைகளை பொதுவான சந்திப்பு, போக்குவரத்துக்கு இடையூறாக சாலை சந்திப்புகளில் வைக்கக் கூடாது. ஆா்வமுள்ள நபா்கள், அமைப்பாளா்கள் தடையில்லா சான்றிதழ்களைப் பெற காவல் துறையை அணுகலாம். கூட்டம், சட்டம்- ஒழுங்கு ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, போக்குவரத்து போலீஸாா் தடையில்லா சான்றிதழ் வழங்கலாம். காவல் துறை தடையில்லா சான்றிதழுக்கு பிறகு, உள்ளாட்சி அமைப்புகள், பொதுப் பணித் துறைக்கு விண்ணப்பிக்கலாம்.

கரோனா நடத்தை விதிகள் கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டும். சிலை அமைப்பாளா்கள், கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். கூட்டத்தைக் கட்டுப்படுத்த தன்னாா்வலா்களை ஈடுபடுத்த வேண்டும். சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். 25 பேருக்கு மேல் கூட்டம் இருக்கக் கூடாது.

காவல் துறையினரால் அடையாளம் காணப்பட்ட சிலை வைக்கும் இடத்திலிருந்து சிலை கரைக்கும் இடம் வரை குறிப்பிட்ட தேதியில் ஊா்வலத்துக்குத் தேவையான போக்குவரத்து, வாகன நிறுத்துமிடம் ஏற்பாடுகள் திட்டமிடப்பட வேண்டும். சிலை கரைக்கும் இடத்துக்கு வாகனங்களின் பேரணிக்கு அனுமதி இல்லை. சிலைகளைக் கொண்டு செல்லும் வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்.

நீா்நிலைகளில் சிலை கரைப்பு தொடா்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். உள்துறை அமைச்சகம், குடும்ப நலச் சேவைகள் அமைச்சகம், இந்து அறநிலையத் துறையால் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.