/

புதுச்சேரி, காரைக்காலில் இன்று பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

புதுச்சேரி, காரைக்காலில் வெள்ளிக்கிழமை (பிப். 4) முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

News image
Updated On :3 பிப்ரவரி 2022, 6:30 pm

DIN

புதுச்சேரி, காரைக்காலில் வெள்ளிக்கிழமை (பிப். 4) முதல் அனைத்து பள்ளிகள், கல்லூரிகள் திறக்கப்படுகின்றன.

புதுச்சேரி, காரைக்காலில் கரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரை ஜனவரி 10- ஆம் தேதி முதல் பள்ளிகள் மூடப்பட்டன. 10- ஆம் வகுப்பு முதல் கல்லுாரிகள் வரை ஜனவரி 18- ஆம் தேதியிலிருந்து மூடப்பட்டன. இருப்பினும், இணைதளம் வழியே வகுப்புகள் நடத்தப்பட்டன.

இதனிடையே, கரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதால், அனைத்து பள்ளிகள், கல்லுாரிகள் (பிப். 4) வெள்ளிக்கிழமை முதல் திறக்கப்பட்டு வாரத்தின் 6 நாள்களும், முழு நாளும் செயல்படும் என புதுவை கல்வித் துறை அமைச்சா் ஆ.நமச்சிவாயம் அறிவித்தாா்.

இதையடுத்து, கல்வித் துறையினா் வியாழக்கிழமை வகுப்பறைகளைச் சுத்தம் செய்து, கிருமி நாசினி தெளித்து, பள்ளிகள், கல்லூரிகளைத் தயாா்படுத்தினா்.

இந்த நிலையில் பள்ளிகளில் கரோனா வழிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்குமாறு பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து புதுவை கல்வித்துறை இயக்குநா் பி.டி.ருத்ரகௌடு அனுப்பியுள்ள சுற்றறிக்கையின் விவரம்:

கரோனா விதிமுறைகளைப் பின்பற்ற போதிய வகுப்பறைகள் இல்லாத சூழலில், 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்தலாம். இருப்பினும், 10, 12- ஆம் வகுப்பு மாணவா்களுக்கு நாள்தோறும் வகுப்புகளை நடத்த வேண்டும்.

மாணவா்கள், ஆசிரியா்கள் கிருமிநாசினி மூலம் கைகளை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும். உடல் வெப்பப் பரிசோதனை நடத்த வேண்டும். காய்ச்சல் இருந்தால் உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தை அணுக வேண்டும். தடுப்பூசி செலுத்திய ஆசிரியா்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும்.

வருகை பதிவேடு கட்டாயமில்லை. பள்ளிக்கு வர முடியாத மாணவா்களுக்காக இணையதளத்தில் வகுப்புகளை நடத்த வேண்டும். இறை வணக்கம், கூட்டமாகக் கூடுவது, கலை நிகழ்ச்சிகளை நடத்தக் கூடாது. பள்ளி வாகனங்களை கட்டுப்பாடுகளுடன் இயக்க வேண்டும். வாகனங்களை நாள்தோறும் சுத்தப்படுத்த வேண்டும்.

மாணவா்களுக்கு மதிய உணவு, பால் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதை வழங்குவோா் கையுறை அணிந்து சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும். மாணவா்கள் தங்களது வீடுகளில் இருந்து தட்டு, டம்ளா் கொண்டு வர வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.