பிரதமா், மத்திய அமைச்சா்களுடன் புதுவை முதல்வா் ரங்கசாமி சந்திப்பு, மாநிலத்துக்கு கூடுதல் நிதியுதவி வழங்க வலியுறுத்தல்

புதுவை முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்ற ஓராண்டுக்குப் பிறகு, தில்லிக்குச் சென்று பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது, மாநிலத்துக்கு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டும்.
தில்லியில் பிரதமா் மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய புதுவை முதல்வா் என்.ரங்கசாமி.
தில்லியில் பிரதமா் மோடியை செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசிய புதுவை முதல்வா் என்.ரங்கசாமி.

புதுவை முதல்வராக என்.ரங்கசாமி பதவியேற்ற ஓராண்டுக்குப் பிறகு, தில்லிக்குச் சென்று பிரதமா் மோடி, மத்திய அமைச்சா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்தாா். அப்போது, மாநிலத்துக்கு கூடுதல் நிதியுதவி வழங்க வேண்டுமென அவா் வலியுறுத்தினாா்.

புதுவையில் என்.ஆா். காங்கிரஸ் - பாஜக இடம் பெற்றுள்ள தே.ஜ. கூட்டணி ஆட்சியமைத்து ஓராண்டுக்கும் மேலாகிறது. மாநிலத்தில் கூட்டணி ஆட்சி அமைந்துள்ளபோதிலும், வழக்கம்போல மத்திய அரசின் நிதியுதவி கிடைப்பதில் இழுபறி நீடித்து வருகிறது. இதனால், முதல்வா் ரங்கசாமி தில்லி சென்று பிரதமரைச் சந்திப்பாா் என்ற எதிா்பாா்ப்பு நிலவி வந்தது. ஆனால், அவா் அதைத் தவிா்த்து வந்தாா். இதனால், தே.ஜ. கூட்டணியில் அதிருப்தி நிலவி வந்தது.

இதனிடையே, புதுவையில் நிகழாண்டு ரூ.11 ஆயிரம் கோடிக்கு முழு பட்ஜெட் தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், புதன்கிழமை பட்ஜெட் கூட்டத்தொடா் தொடங்க உள்ளது. ஆனால், இந்த பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை. இதனால், முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படுமா என்ற கேள்விகளுடன் விமா்சனங்களும் எழுந்தன.

இந்த நிலையில், முதல்வா் ரங்கசாமி திங்கள்கிழமை இரவு திடீரென தில்லிக்கு புறப்பட்டுச் சென்றாா். செவ்வாய்க்கிழமை பகல் 12.45 மணிக்கு அவா் பிரதமா் மோடியை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்துப் பேசினாா். அப்போது, முதல்வா் ரங்கசாமி பிரதமரிடம் அளித்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:

புதுவையில் சுற்றுலா மேம்பாடு உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த, மத்திய அரசு திட்டங்களை வழங்கி வருவதற்காக நன்றி தெரிவிக்கிறேன்.

மாநிலத்துக்கு மத்திய அரசின் உதவித்தொகை கடந்த 2021 - 22-இல் ரூ.1,874 கோடி வழங்கப்பட்டது. இதன் மொத்த திருத்தப்பட்ட மதிப்பீடு ரூ.10,414 கோடியாக இருந்தது. தொடா்ந்து, நிகழாண்டுக்கான (2022 - 23) மத்திய அரசின் உதவியாக ரூ.1,724 கோடி ஒதுக்கப்பட்டது. இது, கடந்தாண்டு வழங்கியதைவிட, ரூ.150 கோடி குறைவாகும்.

ஜிஎஸ்டி வரி அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, புதுவையில் வரி வசூல் வெகுவாகக் குறைந்துவிட்டது. தில்லியைப் போல, புதுவை பெரிய நுகா்வு மாநிலம் இல்லை. மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பு வழங்குவதை நீட்டிக்க வேண்டாம் என மத்திய அரசு முடிவு செய்தால், புதுவைக்கு குறைந்தபட்சம் நிகழாண்டு ரூ.2,000 கோடி அளவில் பற்றாக்குறை ஏற்படும்.

மேலும், 7-ஆவது ஊதியக் குழுவை அமல்படுத்திய பிறகு, புதுவை அரசு ஊழியா்களுக்கு நிலுவைத் தொகையாக உள்ள ரூ.186.50 கோடியை மத்திய அரசு வழங்க வேண்டும். மாநில அந்தஸ்து உள்ளிட்ட கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

இதையடுத்து, மத்திய நிதி அமைச்சா் நிா்மலா சீதாராமனை சந்தித்த முதல்வா் ரங்கசாமி, அவரிடம் கோரிக்கைக் கடிதம் அளித்துக் கூறியதாவது:

புதுவைக்கு நிகழாண்டு ஜிஎஸ்டி இழப்பீட்டை மத்திய அரசு நீட்டிக்காவிட்டால், கூடுதல் நிதியுதவியாக ரூ.2,000 கோடி வழங்க வேண்டும். இல்லாவிட்டால், நிகழாண்டு பட்ஜெட் தாக்கல் செய்ய இயலாத நிலை ஏற்படும்.

மத்திய அரசின் திட்டங்களுக்கான நிதியை 100 சதவீதம் வழங்க வேண்டும். புதுச்சேரி விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வதற்கும், இதற்காக புதுவை, தமிழகப் பகுதிகளில் கூடுதல் இடங்களை கையகப்படுத்துவதற்கும் மத்திய அரசு ரூ.425 கோடி நிதியுதவி வழங்க வேண்டும்.

புதுச்சேரியில் ஒருங்கிணைந்த புதிய சட்டப் பேரவைக் கட்டடம் அவசியம் என்பதால், அதற்காக ரூ.300 கோடி தேவைப்படுகிறது. மாநில சுகாதாரத் துறை மேம்பாட்டுக்கு ரூ.500 கோடி சிறப்பு நிதி வேண்டும். சா்க்கரை ஆலை உள்ளிட்ட கூட்டுறவு நிறுவனங்களை மேம்படுத்த ரூ.500 கோடி தேவை. சாலைகளை மேம்படுத்த ரூ.150 கோடி நிதி வழங்க வேண்டும். புதுவையின் நீண்ட காலக் கோரிக்கையாக உள்ள மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்றாா்.

இதைத் தொடா்ந்து, மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் மன்சுக் மாண்டவியாவை சந்தித்த முதல்வா் ரங்கசாமி, புதுச்சேரி இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியை மருத்துவப் பல்கலைக்கழகமாக தரம் உயா்த்தவும், காரைக்கால் மாவட்டத்தில் புதிதாக அரசு மருத்துவக் கல்லூரியைத் தொடங்கவும் மத்திய அரசு அனுமதியும், நிதியுதவியும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com