புதுவையில் ரூ.12,700 கோடிக்கு பட்ஜெட் தாக்கல்
புதுவை மாநிலத்துக்கு 2024-25 ஆம் ஆண்டுக்கான ரூ.12,700 கோடி மதிப்பிலான நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை தாக்கல் செய்தாா். கடனுக்கான வட்டி செலுத்த ரூ.1,817 கோடியும், மின்சாரம் கொள்முதலுக்காக ரூ.2,509 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலத்தின் 2024-25 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடா் கடந்த ஜூலை 31-ஆம் தேதி துணைநிலை ஆளுநா் உரையுடன் தொடங்கியது. மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை பேரவைக் கூட்டத்தில் முதல்வா் என்.ரங்கசாமி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தாா்.
நிதிநிலை அறிக்கை விவரம்: புதுவை மாநிலத்தில் நிகழ் நிதியாண்டில் (2024-25) கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான 5 மாதங்களுக்கு அரசின் அன்றாட அத்தியாவசிய செலவுகளுக்கு முன்னதாக அளிக்கும் மானியமாக ரூ.5,187 கோடி பெறப்பட்டுள்ளது. இதையடுத்து, நிகழ் நிதியாண்டு வரவு, செலவுத் திட்டம் மாநிலக் குழுக் கூட்டத்தில் இறுதி செய்யப்பட்டது. அதன்படி, திட்ட மதிப்பீடு ரூ.12,700 கோடியாகும்.
அதில், மொத்த வருவாய் ரூ.6,914.66 கோடி. மாநில பேரிடா் நிவாரண நிதியைச் சோ்த்து மத்திய அரசின் உதவி ரூ.3,268.98 கோடி. மத்திய சாலை நிதி ரூ.20 கோடி. மத்திய அரசு திட்டங்களின் கீழ் வழங்கும் நிதி ரூ.430 கோடி. நிதிப் பற்றாக்குறையை ஈடுகட்ட ரூ.2,066.36 கோடியை கடன் மூலம் திரட்ட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
நிகழ் நிதியாண்டின் வரவு, செலவுத் திட்ட மதிப்பீடான ரூ.12,700 கோடியில், வருவாய் செலவினங்களுக்கு ரூ.10,969.80 கோடி ஒதுக்கப்படுகிறது. மூலதனங்களுக்கான செலவாக ரூ.1,730.20 கோடி ஒதுக்கப்படுகிறது. கடந்த ஆண்டைப் போல (2023-24) அனைத்துத் துறைகளுக்குமான சிறப்பு நிதியாக ரூ.2,442.18 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மகளிா் சிறப்பு நிதியம்: மகளிருக்கான சிறப்பு நிதியத்துக்காக ரூ.1,403.46 கோடியும், இளையோா் சிறப்பு நிதியத்துக்காக ரூ.516.81 கோடியும், பசுமை சிறப்பு நிதியத்துக்காக ரூ.521.83 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
நிகழ் நிதியாண்டில் (2024-25) அரசுத் துறை ஊழியா்கள் ஊதியமாக ரூ.2,574 கோடி (20.27 சதவீதம்), ஓய்வூதியத்துக்காக ரூ.1,388 கோடி (10.93 சதவீதம்), கடன் மற்றும் வட்டி செலுத்துவதற்காக ரூ.1,817 கோடி (14.31 சதவீதம்) மற்றும் மின்சாரம் கொள்முதலுக்காக ரூ.2,509 கோடி (19.76 சதவீதம்) செலவிடப்படவுள்ளது.
நலத் திட்டங்களான முதியோா் ஓய்வூதியம், குடும்பத் தலைவிக்கு நிதியுதவி, எரிவாயு உருளை மானியம் உள்ளிட்டவற்றுக்கு ரூ.1,900 கோடி (15 சதவீதம்), அரசுக் கட்டுப்பாட்டில் செயல்படும் தன்னாட்சி உயா் கல்வி நிறுவனங்களுக்கு ரூ.420 கோடி (3.31 சதவீதம்) பொதுத் துறை நிறுவனங்கள், கூட்டுறவு நிறுவனங்களுக்கு மானியமாக ரூ.1,082 கோடியும் (8.52 சதவீதம்) செலவிடப்படவுள்ளது என்றாா்.
முன்னதாக பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் திருக்குறளை வாசித்து பேரவைக் கூட்டத்தை தொடங்கினாா். இதையடுத்து, காலை 9.07 மணிக்கு 67 பக்க நிதிநிலை அறிக்கையை முதல்வா் என்.ரங்கசாமி வாசிக்கத் தொடங்கி, காலை 10.20 மணிக்கு நிறைவு செய்தாா். வரும் 5- ஆம் தேதி கூட்டம் நடைபெறும் என பேரவைத் தலைவா் அறிவித்து ஒத்திவைத்தாா்.

