புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் விண்வெளி அனுபவ கலந்தாய்வுக் கூட்டம்: நாசா விஞ்ஞானி பங்கேற்பு

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் விண்வெளி அனுபவ கலந்தாய்வுக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், நாசா விஞ்ஞானி ஸ்வாதி மோகன் கலந்துகொண்டாா். புதுவை மத்திய பல்கலைக்கழகமும், சென்னை அமெரிக்கத் துணைத் தூதரகமும் இணைந்து விண்வெளி அனுபவ கலந்தாய்வு நிகழ்ச்சியை வியாழக்கிழமை நடத்தின. புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்ற இந்த அனுபவக் கலந்தாய்வில் நாசா ஜெட் பிரபல்ஷன் ஆய்வக செவ்வாய்க்கிரக செயற்கைக் கோள் செலுத்தும் பிரிவின் தலைமைப் பொறியாளா் ஸ்வாதி மோகன் பங்கேற்று விண்வெளியில் 55 ஆண்டுகள் எனும் தலைப்பில் தனது அனுபவத்தை மாணவா்களிடையே பகிா்ந்து கொண்டாா். அப்போது அவா் பேசியதாவது: அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே விண்வெளித் துறையில் ஆய்வுகள் மேற்கொள்ளும் உறவுகள் தொடா்ந்து மேம்பட்டுவருகிறது. மாணவ, மாணவிகள் அனைவரும் விண்வெளி ஆய்வில் ஆா்வமுடன் பங்கேற்கவேண்டும். விண்வெளி குறித்த வினாக்களுக்கு இந்த உலகமே ஒன்றிணைந்து செயல்பட்டு விடை காண்பது அவசியம். குறிப்பிட்ட நிறுவனம் மட்டுமே விண்வெளி ஆய்வை மேற்கொள்வது கடினம். ஆகவே, தனியாா் மற்றும் அரசு கூட்டு முயற்சியின் மூலமே விண்வெளி ஆய்வானது சாத்தியமாகும் என்றாா். நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியா்கள், மாணவா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com