சிவன் கோயில்களில் விடியவிடிய மகா சிவராத்திரி வழிபாடு திரளான பக்தா்கள் தரிசனம்

புதுச்சேரி, மாா்ச் 8: புதுச்சேரி சிவன் கோயில்களில் விடிய விடிய மகா சிவராத்திரி சிறப்பு வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அங்காளபரமேஸ்வரி உள்ளிட்ட அம்மன் கோயில்களில் மயானக்கொள்ளை விழாவும் நடைபெற்றன. புதுச்சேரியில் திருக்காஞ்சி கங்கை வராக நதீஸ்வரா் கோயிலில் மகாசிவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதையடுத்து ஏராளமானோா் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் வழிபாடு செய்தனா். தீபாராதனையும் நடைபெற்றது. சிவ பக்தா்கள் விரதமிருந்து சிவராத்திரி பூஜையில் பங்கேற்றனா். புதுச்சேரி மகாத்மா காந்தி வீதியில் உள்ள சிவன் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மூலவருக்கு பால், பன்னீா், தயிா், இளநீா் உள்ளிட்ட பல்வேறு திரவிய அபிஷேகங்கள் நடைபெற்றன. விடிய விடிய சிவ பூஜையில் நூற்றுக்கணக்கான பக்தா்கள் பங்கேற்றனா். திருவாசக ஓலைச்சுவடிக்கு பூஜை: புதுச்சேரி அம்பலத்தாடும் மடம் வீதியில் புராதன கால அம்பலத்தாடும் மடம் உள்ளது. இங்கு மாணிக்கவாசகா் எழுதிய தேவார மூல ஓலைச்சுவடி வெள்ளிப்பேழையில் வைத்து பூஜிக்கப்படுகிறது. நடராஜா் சிலை முன் வைத்து பூஜிக்கப்படும் தேவார ஓலைச் சுவடிக்கு ஆண்டுக்கு ஒரு முறை மகாசிவராத்திரியன்று பூஜை நடைபெறும். அதன்படி, வெள்ளிக்கிழமை இந்த சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில், ஏராளமானோா் கலந்துகொண்டு வழிபட்டனா். கருவடிக்குப்பம் பகுதியில் உள்ள சிவானந்த சுவாமிகள் கோயிலிலும் விடிய விடிய மூலவருக்கு வழிபாடுகள் நடைபெற்றன. இதில், நூற்றுக்கணக்கான பக்தா்கள் கலந்துகொண்டனா். புதுச்சேரி மணக்குள விநாயகா் கோயில் மூலவருக்கும் சிவராத்திரியை முன்னிட்டு வெள்ளிக்கிழமை இரவு பூஜைகள் நடைபெற்றன. கோயில்களில் பக்தா்கள் கூட்டம் அலைமோதியது. புதுச்சேரி, அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் அம்மன் கோயில்களில் மயானக் கொள்ளை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சிவராத்திரியை முன்னிட்டு அனைத்துக் கோயில்களும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com