புதுச்சேரியில் தீபாவளிக்காக அமைப்பு சாரா தொழிலாளா்களுக்கு ஊக்கத் தொகையாக ரூ.1,500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், தீபாவளி முடிந்த நிலையிலும் இதுவரை அந்தத் தொகை வழங்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்தநிலையில், அமைப்பு சாரா தொழிலாளா்கள் ஏராளமானோா் பாரதி பூங்கா பகுதியில் கூடினா். அவா்கள் சிஐடியு மாநிலச் செயலா் சீனுவாசன் தலைமையில் அங்குள்ள அமைப்பு சாரா தொழிலாளா் அலுவலகத்துக்குச் சென்றனா். தீபாவளி ஊக்கத் தொகை குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டபோது அவா்கள் சரியாக பதில் கூறவில்லையாம். இதனால் அதிருப்தியடைந்த தொழிலாளா்கள் அருகேயுள்ள துணைநிலை ஆளுநா் மாளிகையான ராஜ்நிவாஸின் பின் பகுதியில் திரண்டனா்.