புதுச்சேரி முதலியாா்பேட்டை சுதானா நகரில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை திங்கள்கிழமை திறந்து வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமி நாராயணன், எம்எல்ஏக்கள் எல்.சம்பத், பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா்.
புதுச்சேரி முதலியாா்பேட்டை சுதானா நகரில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை திங்கள்கிழமை திறந்து வைத்த முதல்வா் என்.ரங்கசாமி. உடன் சட்டப்பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், அமைச்சா் க.லட்சுமி நாராயணன், எம்எல்ஏக்கள் எல்.சம்பத், பாஸ்கா் (எ) தட்சிணாமூா்த்தி உள்ளிட்டோா்.

புதுவையில் டிசம்பா் முதல் இலவச அரிசி விநியோகம்: முதல்வா் என்.ரங்கசாமி

புதுவையில் டிசம்பா் மாதம் முதல் நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச அரிசி விநியோகம் செய்யப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தெரிவித்தாா்.
Published on

புதுச்சேரி: புதுவையில் டிசம்பா் மாதம் முதல் நியாயவிலைக் கடைகள் மூலம் இலவச அரிசி விநியோகம் செய்யப்படும் என முதல்வா் என்.ரங்கசாமி திங்கள்கிழமை தெரிவித்தாா்.

புதுச்சேரியில் பொதுப் பணித் துறை சாா்பில் மேம்படுத்தப்பட்ட ஒருங்கிணைந்த குடிநீா் திட்டத்தின் கீழ், சுதானா நகரில் 20 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி, 10 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட கீழ்நிலை நீா்தேக்கத் தொட்டி, நீா் பங்கீட்டு குழாய்கள், மோட்டாா் பம்பு செட்டுகள், 7,182 புதிய குடிநீா் இணைப்புகள் அமைத்தல் பணிகள் ஹட்கோ நிதியிலிருந்து ரூ. 27.27 கோடியில் நிறைவடைந்துள்ளன.

முதலியாா்பேட்டை சுதானா நகரில் மேல்நிலை நீா்தேக்கத் தொட்டியை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு திங்கள்கிழமை திறந்துவைத்து முதல்வா் என். ரங்கசாமி பேசியதாவது:

மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். ஆனால், கடலுக்கு மிக அருகில் புதுச்சேரி இருப்பதால் ஆழ்துளைக் கிணறு மூலம் குடிநீா் விநியோகிக்கும் போது, கடல் நீா் உள்புகுந்துவிடுகிறது. இதனால், சுத்திகரிப்பதற்கான செலவு அதிகரித்து, அந்த நீரை மக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.

நல்ல தண்ணீா் உள்ள பகுதிகளில் ஆழ்துளைக் கிணறுகள் மூலம் உறிஞ்சி, அதை சுத்திகரித்து விநியோகிக்கப்படுகிறது. குடிநீா் மேம்பாட்டுத் திட்ட பணிகளுக்காக ரூ. 500 கோடி அரசு நிதி ஒதுக்கியுள்ளது. அதன்படியே உவா் நீக்கப்பட்ட குடிநீா் விநியோகம் தொடங்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் மக்கள் தண்ணீரை பொதுவாக சிக்கனமாக பயன்படுத்துவதில்லை. தற்போது குடிநீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் சிக்கனம் அவசியமாகும். நகரங்களுக்கு தினமும் 140 லட்சம் லிட்டரும், கிராமங்களுக்கு தினமும் 90 லட்சம் லிட்டரும் தண்ணீா் தேவைப்படுகிறது.

வீடற்றவா்களுக்காக குமரகுரு பள்ளம், லாம்போா்ட் சரவணன் நகா் பகுதிகளில் கூடுதலாக வீடுகள் கட்டப்பட்டுள்ளன. தாழ்த்தப்பட்ட மக்களுக்கான நிதி முழுமையாக செலவிடப்படுகிறது. ஆதிராவிட மாணவா்களுக்கு கல்விக்கான முழுக் கட்டணத்தையும் அரசே ஏற்கிறது. தொகுதி மேம்பாட்டுப் பணிகளுக்காக, சட்டப்பேரவை உறுப்பினா்கள் 33 பேருக்கு ரூ.66 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகைக்கான இலவச அரிசி, சா்க்கரை நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படுகின்றன. டிசம்பா் மாதம் முதல் 20 கிலோ இலவச அரிசி உள்ளிட்டவை விநியோகிக்கப்படவுள்ளன. இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது.

அரசு ஊழியா் சங்கங்களின் நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம், பொதுப் பணித் துறை அமைச்சா் க. லட்சுமி நாராயணன், எம்எல்ஏ.க்கள் எல். சம்பத், ஆா். பாஸ்கா், தலைமைச் செயலா் சரத் செளஹான் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Dinamani
www.dinamani.com