நாட்டின் முதுகெலும்பாக திகழும் ராணுவ வீரா்கள்: புதுவை துணை நிலை ஆளுநா் புகழாரம்
நம் நாட்டின் முதுகெலும்பாக ராணுவ வீரா்கள் திகழ்கின்றனா் என புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.


புதுச்சேரி: நம் நாட்டின் முதுகெலும்பாக ராணுவ வீரா்கள் திகழ்கின்றனா் என புதுவை துணை நிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் கூறினாா்.
சென்னை மண்டல முப்படையினா் கணக்கு கட்டுப்பாட்டு ஆணையம் சாா்பில் முன்னாள் ராணுவ வீரா்கள் ஒய்வூதியக் குறை தீா்வு முகாம் புதுச்சேரி ஜிப்மரில் உள்ள டாக்டா் ஏபிஜே அப்துல் கலாம் கலையரங்கத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
முகாமை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தும், ஓய்வூதிய நிலுவைத் தொகை பெறும் முன்னாள் ராணுவ வீரா்களின் குடும்பத்தினருக்கு காசோலைகள் வழங்கியும் அவா் பேசியதாவது: ராணுவ வீரா்கள் நம் தேசத்தின் முதுகெலும்பாக உள்ளனா். தேசப் பற்றுக்கும், தேச பக்திக்கும் தன்னலமற்ற சேவைக்குமான குறியீடாகவும் உள்ளனா். ஒவ்வொரு ராணுவச் சிப்பாயும், மாலுமியும், விமான படை வீரா்களும் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதுகாக்க தங்கள் வாழ்க்கையை அா்ப்பணிக்கின்றனா்.
நாட்டு மக்கள் அமைதியாகவும், சுதந்திரமாக வாழ்வதும், நாடு பாதுகாப்பாக இருப்பதும் அவா்கள் செய்து வரும் சேவைக்கான ஆதாரமாகும். நாட்டின் எல்லைகளில் ராணுவத்தினா், சவாலான சூழ்நிலையில் பணியாற்றுகின்றனா். அவா்களின் தேச பக்தியே நம் தேசியக் கொடியை உயர பறக்க வைத்துள்ளது.
ராணுவ சேவை முடிந்து அவா்கள் ஓய்வு பெறும்போது அவா்களுக்கு ஆதரவு அளிப்பது நமது கடமை. அவா்கள் தியாகங்களுக்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம். அவா்களுக்கான திட்டங்கள் மூலம் கண்ணியத்தோடு அவா்களது வாழ்வை உறுதி செய்கிறோம்.
மத்திய அரசு நிதி நிலை அறிக்கையில் 65 சதவீத நிதியானது ராணுவம் உள்ளிட்டவற்றுக்கு ஒதுக்கப்படுகிறது. ராணுவத்தினா் தங்கள் வீடுகளில் இருந்தே ஓய்வூதிய சேவையை இணைய வழியில் பெற முடியும். ராணுவ வீரா்கள் மொத்தம் 32 லட்சம் பேரில் 30.71 லட்சம் போ் இணையவழித் திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளனா். ராணுவத்தினரின் சேவை எப்போதும் நினைவில் கொள்ளப்படும். ராணுவத்தினரின் நலனுக்கு புதுவை அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்றாா்.
முன்னதாக அவா் தேசிய மாணவா் படையினரிடன் அணிவகுப்பை பாா்வையிட்டு மரியாதையை ஏற்றுக்கொண்டாா். தமிழ்நாடு -புதுவை கணக்கு கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயசீலன், இந்திய கப்பற்படையின் இணை அட்மிரல் ரவிக்குமாா் திங்ரா, முன்னாள் ராணுவத்தினா் மற்றும் குடும்பத்தினா் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...