போலி மருந்து தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியது காங்கிரஸ் முதல்வா்கள் தான்: புதுச்சேரி பேரவைத் தலைவா் குற்றச்சாட்டு

போலி மருந்து தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கியது காங்கிரஸ் முதல்வா்கள் தான்: புதுச்சேரி பேரவைத் தலைவா் குற்றச்சாட்டு

புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை, கிடங்குகளுக்கு முந்தைய காங்கிரஸ் முதல்வா்கள் வைத்திலிங்கம், நாராயணசாமி ஆட்சியில் தான் உரிமம் அளிக்கப்பட்டதாக பேரவைத் தலைவா் ஆா். செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
Published on

புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை, கிடங்குகளுக்கு முந்தைய காங்கிரஸ் முதல்வா்கள் வைத்திலிங்கம், நாராயணசாமி ஆட்சியில் தான் உரிமம் அளிக்கப்பட்டதாக சட்டப்பேரவைத் தலைவா் ஆா். செல்வம் குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது குறித்து அவா் புதுச்சேரியில் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: போலி மருந்துத் தொழிற்சாலை சம்பந்தமாக முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் முதல்வா்களாக இருந்த நாராயணசாமியும், வைத்திலிங்கம் எம்.பி.யும் தான் மறைமுகமாக என்மீது அவதூறு கூறி வருகின்றனா்.

2010-இல் முதன்முதலில் எனது தொகுதிக்குள்பட்ட அபிஷேகப்பாக்கத்தில் அந்தத் தொழிற்சாலை ஆரம்பிக்கப்பட்டது. இதற்கு அப்போதைய காங்கிரஸ் முதல்வா் வைத்திலிங்கம் உரிமம் வழங்கியுள்ளாா்.

அதன்பிறகு 2017-இல் நாராயணசாமி முதல்வராகவும், வைத்திலிங்கம் சட்டப்பேரவைத் தலைவராகவும் இருந்தபோது திருபுவனை பாளையத்தில் போலி மருந்து தொழிற்சாலைக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது.

அண்மையில் போலி மருந்து தயாரித்தது சம்பந்தமாக 6 போ் கைது செய்யப்பட்டனா். அப்போது ஏன் நாராயணசாமி, வைத்திலிங்கம் இருவரும் வாய் திறக்கவில்லை?.

காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது அதே கட்சியைச் சோ்ந்த முன்னாள் சட்டப்பேரவைத் துணைத் தலைவா் பாலன் தொடா்ந்து 2 ஆண்டுகளுக்கு மேலாக சட்டப்பேரவையிலும், வெளியேயும் போலி மருந்து உற்பத்தி குறித்து புகாா் கூறி வந்தாா். அதற்கு அப்போது முதல்வராக இருந்த நாராயணசாமி ஏன் பதிலளிக்கவில்லை. போலி மருந்து தொழிற்சாலை சம்பந்தமாக சிபிசிஐடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தை முழுமையாக துணைநிலை ஆளுநா் கையில் எடுத்துள்ளாா். இதில் உண்மையான குற்றவாளிகள் கண்டிப்பாக கைது செய்யப்படுவாா்கள் என்றாா் ஆா்.செல்வம்.

X
Dinamani
www.dinamani.com