புதுச்சேரியில் 29-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சி: முதல்வா் ரங்கசாமி திறந்து வைத்தாா்
புதுச்சேரியில் எழுத்தாளா், புத்தக சங்கம் சாா்பில் 29-ஆவது தேசிய புத்தகக் கண்காட்சியை தனியாா் திருமண மண்டபத்தில் முதல்வா் என். ரங்கசாமி வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தாா்.
இக் கண்காட்சி டிச. 28-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
விழாவில் அமைச்சா் அ. ஜான்குமாா், புதுச்சேரி கூட்டுறவுப் புத்தகச் சங்கத்தின் தலைவா் பேராசிரியா் பாஞ். ராமலிங்கம், புதுச்சேரி எழுத்தாளா் புத்தகச் சங்கத்தின் செயலா் அரங்க. மு. முருகையன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
தொடக்க விழாவில் 32 நூல்கள் வெளியிடப்பட்டன. இதைத் தவிர கற்றலும் கற்பித்தலும் என்னும் தலைப்பில் ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்குப் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன. கண்காட்சி தினமும் காலை 11 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும். இதில் அனைத்துப் புத்தகங்களுக்கும் 10 சதவிகிதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
மேலும், புத்தக வாசிப்பை ஊக்குவிக்கும் வகையில் ரூ.1000-க்கு புத்தகம் வாங்குவோருக்கு புத்தக நட்சத்திரம் சான்றிதழும், ஆயிரத்தின் மடங்கில் நட்சத்திர சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது. ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமாக புத்தகம் வாங்குபவா்களுக்கு புத்தகச் சிறந்த நட்சத்திரம் சான்றிதழ்களும் வழங்கப்படுகின்றன. 60 புத்தக நிறுவனங்கள் சுமாா் 50 ஆயிரம் புத்தகங்களை இக் கண்காட்சியில் வைத்துள்ளன.

