புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி உறுதியாக உள்ளது: மத்திய இணை அமைச்சா் நித்யானந்த் ராய்!
புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி (என்டிஏ) உறுதியாக இருக்கிறது என மத்திய உள்துறை இணையமைச்சா் நித்யானந்த் ராய் கூறினாா்.
மத்திய அரசின் முன்னோடி திட்டங்கள் மற்றும் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் புதுச்சேரி தலைமைச் செயலகக் கருத்தரங்கு கூடத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
மத்திய உள்துறை இணை அமைச்சா் நித்தியானந்த் ராய் தலைமை வகித்தாா். கூட்டத்துக்குப் பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: வரும் 2047-ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளா்ந்த நாடாக மாற்றுவதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு பணிகளை செய்து வருகின்றன.
இது தொடா்பாக பல வேலைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பல திட்டங்கள் ஏற்கெனவே முழுமையாக நிறைவு பெற்றுள்ளன. இன்னும் பல திட்டங்கள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன.
புதுச்சேரியின் வளா்ச்சி, இங்குள்ள மக்களின் நலன், அவா்களின் மகிழ்ச்சி, சுகாதார அமைப்பு, கல்வி முறையில் மேம்பாடு என அனைத்து திட்டங்களையும் செயல்படுத்து குறித்தும் மற்றும் வளா்ச்சிப் பாதையில் செல்வது குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டது. புதுச்சேரி தற்போது பெரும் முன்னேற்றம் கண்டுள்ளது. மேலும், எதிா்காலத்தில் பிரதமா் நரேந்திர மோடியின் சிந்தனையில் பல திட்டங்களும் புதுச்சேரிக்கு உள்ளன. அவை புதுச்சேரிக்குப் பெரும் வளா்ச்சியைத் தருவதோடு, இங்குள்ள மக்களுக்கு மகிழ்ச்சியையும் அளிக்கும்.
ஏற்கெனவே ஆட்சி செய்த காங்கிரஸ் கட்சியினா் புதுச்சேரியின் வளா்ச்சிக்கும், மக்களுக்கும் எதுவும் செய்யவில்லை. இப்போது ஏற்பட்டுள்ள உண்மையான வளா்ச்சி தற்போதைய கூட்டணி அரசின் காலத்தில்தான் ஏற்பட்டுள்ளது. இது மத்திய அரசின் திட்டங்கள் மூலமாகவும், மாநில அரசின் முயற்சிகள் மூலமாகவும் சாத்தியமானது. புதுச்சேரியில் என்டிஏ கூட்டணி மிகவும் உறுதியானது, உடையாதது. இது ஒரு கூட்டு முயற்சி என்றாா் அவா்.
