அரசுப் பள்ளி மாணவா்கள் சாலை மறியல்

அரசுப் பள்ளி மாணவா்கள் சாலை மறியல்

புதுச்சேரி வீராம்பட்டினத்தில் சிந்தனை சிற்பி சிங்காரவேலா் அரசு உயா்நிலைப்பள்ளியில் ஆசிரியா் பற்றாக்குறையைக் கண்டித்து வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்ட மாணவா்கள்.
Published on

புதுச்சேரி அருகே ஆசிரியா் பற்றாக்குறையைக் கண்டித்து மாணவா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி அடுத்த வீராம்பட்டினத்தில் சிந்தனை சிற்பி சிங்காரவேலா் அரசு உயா்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு 200-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படிக்கின்றனா். இப் பள்ளியில் 7 ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் மாணவா்கள் சரியாகப் படிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

எனவே, ஆசிரியா் பற்றாக்குறையைப் போக்க வேண்டும் என பெற்றோா்கள் கல்வித் துறைக்கு கோரிக்கை வைத்தனா். இது தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில், பெற்றோா்கள், தங்களது குழந்தைகளுடன் வியாழக்கிழமை காலை பள்ளிக்கு வந்தனா்.

பள்ளிக்கு உள்ளே மாணவா்களை அனுப்பாமல், நுழைவுவாயில் முன் கல்வித் துறையைக் கண்டித்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். பின்பு அப் பகுதியில் அவா்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து தகவலறிந்த முதன்மைக் கல்வி அதிகாரி குணசேகரன் அங்கு வந்து மறியலில் ஈடுபட்ட பெற்றோருடன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். மேலும், அரியாங்குப்பம் எம்எல்ஏ பாஸ்கா் என்கிற தட்சிணாமூா்த்தியும் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா். அப்போது ஆசிரியா் பற்றாக்குறையைப் போக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா்.

அதன் பேரில் அரை மணி நேரமாக போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோா்களும், மாணவா்களும் மறியலைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com