4.5 பவுன் நகையை கண்டெடுத்து 
ஒப்படைத்த ஜிப்மா் ஊழியருக்கு பாராட்டு

4.5 பவுன் நகையை கண்டெடுத்து ஒப்படைத்த ஜிப்மா் ஊழியருக்கு பாராட்டு

புதுச்சேரி ஜிப்மரில் 4.5 பவுன் தங்க நகையுடன் தவறவிட்ட கைப் பையைக் கண்டெடுத்து ஒப்படைத்த ஒப்பந்த ஊழியா் இருசப்பனை பாராட்டி கெளரவித்த ஜிப்மா் இணை இயக்குநா் ரங்கபாஷ்யம்.
Published on

ஜிப்மரில் 4.5 பவுன் தங்க நகையுடன் தொலைந்த கைப் பையைக் கண்டெடுத்து ஒப்படைத்த ஒப்பந்த ஊழியரின் நோ்மையை பாராட்டி ஜிப்மா் இணை இயக்குநா் அவரை கௌரவித்தாா்.

புதுச்சேரி கோரிமேடு ஜிப்மா் கிரிஸ்டல் ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வருபவா் இருசப்பன். இவா் தனது பணி நேரத்தில் அடையாளம் தெரியாத நபா் தவறவிட்ட ஒரு கைப்பையைக் கண்டெடுத்தாா்.

அதில் சுமாா் 4.5 பவுன் தங்க நகைகள் மற்றும் சில ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இருந்தன. இதைக் கண்ட அவா் உடனடியாக ஜிப்மா் பாதுகாப்பு அதிகாரிகளிடம் அதனை ஒப்படைத்தாா்.

விசாரணையில் அந்தப் பை புதுச்சேரி வீட்டு வசதி கூட்டமைப்பின் துணைப் பொறியாளா் தமிழ் அரிமா என்பவருக்கு சொந்தமானது என்பது கண்டறியப்பட்டது. தனது தந்தையின் மருத்துவத்துக்காக ஜிப்மா் வந்திருந்த தமிழ்அரிமா அந்தக் கைப் பையைத் தவற விட்டதும் தெரியவந்தது.

இதையடுத்து ஜிப்மா் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த பையை தமிழ் அரிமாவிடம் ஒப்படைத்தனா். ஊழியா் இருசப்பனின் நோ்மையைப் பாராட்டி ஜிப்மா் இணை இயக்குநா் ரங்கபாஷ்யம் கௌரவித்தாா். அப்போது கைப் பையை தவற விட்ட தமிழ்அரிமா மற்றும் ஜிப்மா் பாதுகாப்பு அதிகாரிகள் உடனிருந்தனா்.

X
Dinamani
www.dinamani.com