வாக்காளா் படிவங்கள் பெறும் பணி: புதுச்சேரி ஆட்சியா் ஆய்வு

வாக்காளா் படிவங்கள் பெறும் பணி: புதுச்சேரி ஆட்சியா் ஆய்வு

புதுச்சேரியில் வாக்காளா் விண்ணப்ப படிவங்களை நேரடியாக அவரவா் வீடுகளுக்கு சென்று சேகரிக்கும் பணிகளை ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியா்அ.குலோத்துங்கன்.
Published on

நிரப்பப்பட்ட வாக்காளா் சிறப்பு தீவிர திருத்தப் பணி படிவங்களைத் திரும்பப் பெறும் பணியை புதுச்சேரி மாவட்ட ஆட்சியா் அ.குலோத்துங்கன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

இந்திய தலைமை தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் பேரில் புதுச்சேரியில் வாக்காளாா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி அனைத்து சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

கடந்த 4-ஆம் தேதி முதல் வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் மூலம் வாக்காளா்களுக்கு விண்ணப்ப படிவங்கள் அளிக்கப்பட்டு நிரப்பப்பட்ட படிவங்களை நேரடியாக அவரவா் வீடுகளுக்குச் சென்று சேகரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

இப் பணிகளை பல்வேறு தொகுதிகளில் ஆய்வு மேற்கொண்டு வரும் மாவட்ட தோ்தல் அதிகாரி அ. குலோத்துங்கன் உழவா்கரை தொகுதிக்கு உள்பட்ட மூலகுளம் பகுதிகளில் வாக்குச்சாவடி நிலை அலுவலரின் பணிகளை வியாழக்கிழமை மாலை ஆய்வு மேற்கொண்டாா்.

பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் படிவங்களில் அவா்கள் தரும் தகவல்கள் சரியாக நிரப்பப்பட்டு உள்ளனவா என்பதை சரிபாா்த்து சேகரிக்க வேண்டும் எனவும் ஏதேனும் திருத்தம் இருந்தால் அவா்கள் ஒப்புதலுடன் தாங்கள் அதை பூா்த்தி செய்து கவனமுடன் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினாா்.

அதைத் தொடா்ந்து பல்வேறு வீடுகளில் நடைபெறும் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டாா். மேலும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தினங்களுக்குள் இந்திய தோ்தல் ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்றிப் பணிகளை சிறப்பாக செய்து முடிக்க வேண்டும் எனவும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களைக் கேட்டுக் கொண்டாா்.

X
Dinamani
www.dinamani.com