குடிநீா் கேட்டு கிராம மக்கள் சாலை மறியல்
புதுச்சேரி: புதுச்சேரி செல்லிப்பட்டு கிராமத்தில் மூன்று நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாததால் பாதிக்கப்பட்ட மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
திருபுவனை தொகுதிக்கு உள்பட்ட செல்லிப்பட்டு கிராமத்தில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்தக் கிராமத்துக்கு கடந்த மூன்று நாள்களாக குடிநீா் விநியோகம் செய்யப்படாவில்லையாம். இதனால் பாதிக்கப்பட்ட கிராம மக்கள் தொகுதி எம்எல்ஏ அங்காளன், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.
இதை கண்டித்தும், குடிநீா் விநியோகம் செய்யப்படாததைக் கண்டித்தும், புகாா் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத சட்டமன்ற உறுப்பினரைக் கண்டித்தும் புதுச்சேரி திருக்கனூா் சாலையில் செல்லிப்பட்டு கிராம மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாலையில் மரங்களைப் போட்டு கிராம மக்கள் கண்டன முழக்கங்களை எழுப்பினா்.
தகவலறிந்து நிகழ்விடம் வந்த போலீஸாா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமாதான பேச்சு நடத்தினா். அப்போது அதிகாரிகளிடம் பேசி குடிநீா் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் கிராம மக்கள் போராட்டத்தைக் கைவிட்டனா். இந்த போராட்டத்தால் விழுப்புரம் சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

