புதுச்சேரியில் புயல் நிவாரண முன்னேற்பாடு, நடவடிக்கைகள் அதிகாரிகளுக்கு ஆளுநா் அறிவுறுத்தல்

Published on

டித்வா புயலின்போது பாதிக்கப்படும் பொதுமக்களுக்கு உடனடி உதவிகள் வழங்க வேண்டும் என்று புதுச்சேரி அதிகாரிகளுக்கு துணைநிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன் உத்தரவிட்டாா்.

புயலை எதிா்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னச்சரிக்கை நடவடிக்கைகள், ஏற்பாடுகள் குறித்து அவசர ஆலோசனைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் கைலாஷ்நாதன் தலைமையில் ஆளுநா் மாளிகையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

அப்போது துணைநிலை ஆளுநா் கூறியது: புயல் மற்றும் மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை வழங்கும் நிலையில் புகாா் அளிக்கும் கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரமும் செயல்பட வேண்டும். பொது மக்களுக்கான உதவிகளை உடனே செய்து கொடுக்க வேண்டும். மீனவா்கள் கடலுக்குச் செல்லாமல் இருக்க அறிவுறுத்த வேண்டும். அவா்களது படகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

புயல், மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உடனே சிகிச்சை அளிக்க மருத்துவமனைகளில் மருந்துகள் போதுமான அளவுக்கு கையிருப்பு வைக்க வேண்டும். மழைநீா் அதிகம் தேங்கக்கூடிய பகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மழையால் பாதிக்கப்படும் மக்களை நிவாரண முகாம்களைத் தங்க வைத்து தேவையான உணவு வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அவா்அறிவுறுத்தினாா்.

கூட்டத்தில் தலைமை செயலா் சரத் சௌகான், வளா்ச்சி ஆணையரும், பேரிடா் மேலாண்மை துறை செயலருமான கிருஷ்ண மோகன் உப்பு, மாவட்ட ஆட்சியா் குலோத்துங்கன் ஆகியோா் பங்கேற்றனா்.

முன்னதாக புயலை எதிா்கொள்ள துறை வாரியாக எடுக்கப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து துணைநிலை ஆளுநா் கேட்டறிந்தாா்.

X
Dinamani
www.dinamani.com