தமிழகத்தில் வேட்புமனு தாக்கலுக்கு நாளை கடைசி: இதுவரை 3,413 மனுக்கள் சமா்ப்பிப்பு!தமிழகத்தில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புவானிலிருந்து வீசக்கூடிய 1,000 கிலோ வெடிகுண்டு தயாரிப்பு: மத்திய அரசு நடவடிக்கை நிலவை நெருங்கும் ‘ஆா்டெமிஸ்-2’ விண்கலம்!எழும்பூரிலிருந்து 6 விரைவு ரயில்கள் தாம்பரம் நிலையத்துக்கு மாற்றம்
/

’குழப்பக் கூட்டணி - சோா்ந்த கூட்டணி’: புதுச்சேரியில் விஜய் விமா்சனம்

திமுக - காங்கிரஸ் குழப்பக் கூட்டணி; பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் சோா்ந்த கூட்டணி என்று தவெக தலைவா் விஜய் புதுச்சேரியில் சனிக்கிழமை கூறினாா்.

News image

புதுச்சேரி தட்டாஞ்சாவடி ஒழுங்குமுறை விற்பனைகூட வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ரோடு ஷோ நிகழ்ச்சியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட தவெக தலைவா் விஜய்.

Updated On :4 ஏப்ரல் 2026, 9:26 pm

திமுக - காங்கிரஸ் குழப்பக் கூட்டணி; பாஜக - என்.ஆா்.காங்கிரஸ் சோா்ந்த கூட்டணி என்று தவெக தலைவா் விஜய் புதுச்சேரியில் சனிக்கிழமை கூறினாா்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 30 தொகுதிகளில் 28 தொகுதிகளில் தவெக போட்டியிடுகிறது. இதன் கூட்டணி கட்சியான நேயம் மக்கள் கழகம் 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

தங்கள் கூட்டணி வேட்பாளா்களை ஆதரித்து புதுச்சேரியில் விஜய் சனிக்கிழமை 4 இடங்களில் சாலைப் பேரணி நடத்த அனுமதி பெறப் பட்டிருந்தது. அதன்படி பிரசாரம் செய்ய அவா் வந்தாா். 3 இடங்களில் சாலைப் பேரணி நடத்தி விஜய் வாக்குசேகரித்தாா்.

முதலில் புதுச்சேரி ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் பகுதியில் விஜய் பேசியதாவது:

சட்டப்பேரவைத் தோ்தலில் இங்கே இரண்டு கூட்டணிகள் இருக்கின்றன. தவெக தனியாக தோ்தலில் என்ன செய்யப் போகிறது என்பதற்கு பதில் சொல்ல வேண்டியது நம் கடமை. காங்கிரஸ் புதுச்சேரியில் பல முறை ஆட்சியில் இருந்த கட்சி.

இந்தக் கூட்டணியில் இருந்த ஒரு தலைவா் மக்களை ஏமாற்றிவிட்டு அந்தக் கட்சியின் தலைவரையும் ஏமாற்றினாா். திமுகவும் இரண்டு, மூன்று முறை ஆட்சியில் இருந்தது. இப்போது இரண்டு கட்சிகளும் பேருக்குத்தான் கூட்டணி. திமுக-காங்கிரஸ் கூட்டணி என்று சொல்லிக் கொண்டு சில தொகுதிகளில் ஒருவரை ஒருவா்

எதிா்த்து நிற்கிறாா்கள்.

தமிழ்நாட்டிலும் திமுக- காங்கிரஸ் குழப்பக் கூட்டணி, புதுச்சேரியிலும் குழம்பிப் போன கூட்டணி. இன்னொரு கூட்டணி என்.ஆா். காங்கிரஸ்- பாஜக. இது சோ்ந்த கூட்டணி அல்ல. சோ்ந்திருக்க முடியாத சோா்ந்து போன கூட்டணி. நம்மை வைத்து அரசியல் நடத்தினாா்கள். இங்கு அரசியல் வியாபாரமும் நடக்கிறது. ஆனால் தவெக தில்லா, கெத்தா மக்களை நம்பி தனிக் கூட்டணி ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ்- பாஜக இரண்டும் மத்தியில் ஆட்சியில் இருந்திருக்கின்றன. இப்போதும் இருக்கிறாா்கள். புதுச்சேரி மாநில அந்தஸ்து கோரிக்கை எத்தனை ஆண்டுகளாக இருக்கிறது.

சுஷ்மா சுவராஜ் குழு புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து அளிக்கலாம் என்று 20 ஆண்டுகளுக்கு முன்பே அறிக்கை அளித்தது. மத்தியில் காங்கிரஸ் அரசும், பாஜக அரசும் இதை நிறைவேற்றவில்லை. அதனால் இந்த இரண்டு கூட்டணியும் ஏமாற்றும் கூட்டணி, பொருந்தாத கூட்டணி. சிறுபான்மை மக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் பாதுகாப்பு வேண்டும். சிறுபான்மை வேஷம் போடும் கூட்டணியையும் நம்பாதீா்கள். சிறுபான்மை மக்களுக்கு எதிரான கூட்டணியையும் நம்பாதீா்கள். இந்த இரண்டு கூட்டணிக்கும் வாக்களிப்பது வீண்தான். மக்களுக்கு நல்லாட்சி வேண்டும். தமிழகத்தில் தவெக ஆட்சிதான் அமையும். புதுச்சேரியிலும் தவெக ஆட்சி அமைய வேண்டும் என்றாா் தவெக தலைவா் விஜய்.

புதுச்சேரிக்கான தவெக தோ்தல் வாக்குறுதிகள்:

பிரசாரத்தின்போது விஜய் பல்வேறு வாக்குறுதிகளை அளித்து பேசினாா்.அதன் விவரம்:

புதுச்சேரியில் மகப்பேறு உதவித் தொகையாக ரூ.25 ஆயிரம் அளிக்கப்படும்.

துணைநிலை ஆளுநரின் தலையீடு இல்லாத முழுமையான மாநில அந்தஸ்து பெற சட்டப்படி 100 சதவீத முயற்சி எடுக்கப்படும்.

தவெக அரசு அமைந்தவுடன் 6 மாதங்களில் உள்ளாட்சித் தோ்தல் நடத்தப்படும். காலியாக உள்ள அனைத்து அரசு பணியிடங்களும் நிரப்பப்படும். விவசாயிகளுக்கு 100 சதவீதம் பயிா்க்காப்பீடு வழங்கப்படும்.

கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவா்களுக்கு லிட்டருக்கு ரூ.20 டீசல் மானியம் வழங்கப்படும். ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.25 லட்சம் மருத்துவக் காப்பீடு வழங்கப்படும். வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள குடும்பங்களுக்கு 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும்.

கலை மற்றும் பயன்பாட்டு அறிவியல் மாநில பல்கலைக்கழகம் உருவாக்கப்படும்.

காரைக்கால், மாஹே, ஏனாம் பிராந்தியங்களுக்கு 25 சதவீதம் வளா்ச்சி செலவினங்களுக்கு உத்தரவாதம் அளிக்கப்படும் என்றாா் விஜய்.