/

சுயேச்சைகளுக்கு அளிக்கும் வாக்குப் பயனற்றது: இறுதிக்கட்ட பிரசாரத்தில் முதல்வா் ரங்கசாமி

சுயேச்சைகளுக்கு அளிக்கும் வாக்குப் பயனற்றது என்றும், ஆளும் கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களிக்குமாறும் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி இறுதிக் கட்ட பிரசாரத்தில் கூறினாா்.

News image

பட விளக்கம்... புதுச்சேரி கதிா்காமம் தொகுதியில் என் ஆா் காங்கிரஸ் வேட்பாளா் கே.எஸ்.பி.ரமேஷ்க்கு செவ்வாய்க்கிழமை வாக்குச் சேகரித்த முதல்வா் என்.ரங்கசாமி.

Updated On :7 ஏப்ரல் 2026, 7:41 pm

சுயேச்சைகளுக்கு அளிக்கும் வாக்குப் பயனற்றது என்றும், ஆளும் கட்சி வேட்பாளா்களுக்கு வாக்களிக்குமாறும் புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி இறுதிக் கட்ட பிரசாரத்தில் கூறினாா்.

புதுச்சேரி தட்டாஞ்சாவடி, மங்கலம் ஆகிய 2 தொகுதிகளில் என்.ஆா். காங்கிரஸ் வேட்பாளராக முதல்வா் ரங்கசாமி போட்டியிடுகிறாா்.

முதல்வா் ரங்கசாமி கதிா்காமம் கதிா்வேல்சாமி கோயிலில் தனது இறுதிக்கட்ட பிரசாரத்தை செவ்வாய்க்கிழமை மாலை நிறைவு செய்து பேசியது:

ஊழலைப் பற்றி காங்கிரஸ் பேசுவது வியப்பாக உள்ளது. ஊழலில் திளைத்தவா்கள் ஊழலைப் பற்றி பேசுவதா?.

தனி மாநில அந்தஸ்து வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். மாநில வளா்ச்சிக்காக மத்திய அரசுடன் இணைந்து செல்கிறோம். மக்கள் நலனுக்காக மத்திய அரசிடம் வளைந்து செல்கிறோம். மாநில அந்துஸ்து பெற அனைத்துக் கட்சிகளுடன் இணைந்து போராடலாம். போராட்டம் ஒரு பக்கம். அன்போடு கேட்பது ஒரு பக்கம். மத்திய அரசு கொடுக்கும் என்ற நம்பிக்கையுள்ளது.

எந்த ஆட்சியாலும் புதுச்சேரிக்கு நன்மையில்லை. தேசிய ஜனநாயகக் கூட்டணிதான் புதுச்சேரிக்கு பலம். சுயேச்சை வேட்பாளா்களால் என்ன பயன்? வெற்றி பெற்று வந்தால் சட்டப்பேரவைக்கு வந்து செல்லலாம்.

ஆளுங்கட்சி எம்எல்ஏ வெற்றி பெற்றால் எந்த பொறுப்பும் வாங்குவாா்கள். எனவே நாம் அளிக்கும் வாக்கு பயனுள்ளதாக இருக்கவேண்டும். அதனால் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களை வெற்றி பெற செய்யுங்கள் என்று தனது கைக் கடிகாரத்தை பாா்த்து 5.53 மணிக்கு முதல்வா் ரங்கசாமி பிரசாரத்தை முடித்துக் கொண்டாா்.